புனித பேதுரு பெருங்கோவில் திருப்பலியின்போது கர்தினால் அந்தோனியோ தாக்லேயுடன் திருத்தந்தை - 140321 புனித பேதுரு பெருங்கோவில் திருப்பலியின்போது கர்தினால் அந்தோனியோ தாக்லேயுடன் திருத்தந்தை - 140321 

பிலிப்பீன்ஸில் நற்செய்தி அறிவித்தலின் 500ம் ஆண்டு கொண்டாட்டம்

நாம் காணாமற்போனபோது நம்மைத் தேடியும், நாம் கீழே விழுந்தபோது நம்மைத் தூக்கிவிட்டும், நாம் காயமுற்றபோது நம்மைக் குணப்படுத்தியும் உதவுகிறவர் நம் இறைவன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடவுள் நம்மை எவ்வளவு தூரம் அன்புகூர்ந்தார் என்றால். தன் ஒரே மகனையே நமக்கு கையளித்தார் என, நற்செய்தியின் இதயமாக இருக்கும் கூற்று, வெறும் கொள்கை அல்ல, மாறாக, நம் வாழ்வுப் பயணம் முழுவதும் நாம் பெறும் அனுபவம் என, இஞ்ஞாயிறு திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவையொட்டிய கொண்டாட்டத் திருப்பலியை, பிலிப்பீன்ஸ் நாட்டு விசுவாசிகளுடன், புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'கடவுள் நம்மை அன்புகூர்ந்தார்', 'ஒரே மகனையே நமக்கு அளித்தார்' என்ற இரு கூற்றுகள் குறித்து, இந்நாளில் சிந்திப்போம், என்ற அழைப்புடன், தன் மறையுரையைத் துவக்கினார்.

கடவுள் இவ்வுலகின்மீது அன்புகூர்ந்தார் என நிக்கதேமிடம் இயேசு கூறும் வார்த்தைகள், தன் மகன் வழியாக மனித உடல் எடுத்து வந்த இறைவன் குறித்து எடுத்துரைக்கின்றது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் காணாமற்போனபோது நம்மைத் தேடியும், நாம் கீழே விழுந்தபோது நம்மைத் தூக்கிவிட்டும், நாம் காயமுற்றபோது நம்மைக் குணப்படுத்தியும் உதவிய இறைவன், நாம் தொலைந்துவிடாதபடி, நம்மை, தொடர்ந்து அன்புகூர்கிறார் என உரைத்தார்.

மேலிருந்து பாராமுகத்துடன் நம்மை நோக்கும் ஒருவரல்ல நம் இறைவன், மாறாக, நம் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியுள்ள அன்புநிறை தந்தை நம் கடவுள் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவிகளின் மரணத்தில் இன்பம் காண்பவரல்ல நம் கடவுள், மாறாக, எவரும் தவறிவிடாதபடி, நம்மீது அன்புகாட்டி அரவணைப்பவர் நம் கடவுள் என உரைத்தார்.

கடவுள் நம்மீது கொண்ட அன்பால் தன்னையே நமக்காக கையளித்தார் என்று தன் மறையுரையில் கூறிய திருத்தந்தை, அன்புகூர்பவர்கள், எப்போதும், தங்களைத் தாண்டிச் சென்று, அதாவது, சுயநலன்களைத் தாண்டி, தங்களையே முழுமையாகக் கையளிக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்ப்போம் எனக் கேட்டுக்கொண்டார்.

அதிகம் அதிகமாக அன்புகூரும்போது, அதிகம் அதிகமாக நம்மையே கொடையாக வழங்குகிறோம் என்பது, வாழ்வைக் குறித்து நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் எவ்வளவு பெற்றுள்ளோம் என்பதல்ல, மாறாக, நாம் அன்பில் எவ்வளவு வழங்கியுள்ளோம் என்பதே, இறுதியில் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் எடுத்துரைத்தார்.

புலம்பி அழும் எல்லாரும் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள் (எசாயா 66:10-11) என திருஅவை இந்நாளில் விடும் அழைப்பை நினைவுகூரும் நாம், கடந்த வாரம், துன்புறும் ஈராக் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருந்ததை எண்ணிப்பார்ப்போம் எனவும் அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருணைநிறை அன்பிற்காக இறைவனுக்கு நன்றியுரைப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

உலகப் பொருட்கள் உட்பட பல்வேறு விடயங்களில் மகிழ்வைத் தேடி அலையும் நாம், தனியாக இல்லை, நம்முடன், அனைத்து வேளைகளிலும் பயணம் செய்யும் ஒருவர் உள்ளார் என்பதை உணர்வதில்தான் நம் உண்மை மகிழ்ச்சி உள்ளது என்பதை தெரிந்துகொண்டவர்களாக செயல்படுவோம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பீன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டை சிறப்பிக்கும் இவ்வேளையில், தாங்கள் பணிபுரியும் ஒவ்வோர் இடத்திலும் நற்செய்தியின் சான்றுகளாகச் செயல்படும் அந்நாட்டு மகளிரின் விசுவாச வாழ்வுக்கு நன்றி தெரிவித்ததோடு, இப்பணி தொடரவேண்டும் என விண்ணப்பிப்பதாகவும் கேட்டுக்கொண்டார்.

மற்றவர்களை பலவந்தமாக மனந்திருப்புவதில் அல்ல, மாறாக, நற்செய்தியை எடுத்துரைக்கும் பணியில் தொடர்ந்து உறுதியுடன் இருங்கள் என பிலிப்பீன்ஸ் மக்களை, தான் உறுதிப்படுத்த விரும்புவதாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களை தீர்ப்பிட அல்ல, மாறாக, நல்விதைகளை விதைத்து, கிறிஸ்துவின் மீட்பை அனைவருக்கும் கொணர உதவுவோம் என்ற விண்ணப்பத்துடன் தன் மறையுரையை நிறைவுச் செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2021, 13:42