காங்கோ குடியரசில் எபோலா நோய்க்கு 1995ல் பலியான சகோதரிகளில் ஒருவர் காங்கோ குடியரசில் எபோலா நோய்க்கு 1995ல் பலியான சகோதரிகளில் ஒருவர் 

திருஅவையில் மேலும் 7 இறையடியார்களின் விவரங்கள் ஏற்பு

நோயாளிகளை விட்டு அகல மறுத்து, நோயால் உயிர்துறந்த 3 பேர் உட்பட, 7 பேரின் புண்ணியத்துவ வாழ்வு குறித்த விவரங்கள் திருத்தந்தையால் ஏற்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள், மார்ச் 17, இப்புதன் பிற்பகலில், திருத்தந்தையைச் சந்தித்து, 7 இறையடியார்களின் வாழ்வு குறித்த சிறப்பு விவரங்களை சமர்ப்பித்தார்.

இத்தாலியில் 1742ம் ஆண்டு பிறந்து, அந்நாட்டின் Monreale பேராயராக பணியாற்றி 1805ம் ஆண்டு உயிரிழந்த , பேராயர் Mercury Maria Teresi, தூய மரியாவின் பாதுகாப்பு புதல்வியர் துறவு சபையை உருவாக்கி, 1636ம் ஆண்டு உயிரிழந்த இஸ்பானிய மறைமாவட்ட அருள்பணி, இறையடியார் Cosma Muñoz Pérez, 1816ம் ஆண்டு பிறந்து, 1889ம் ஆண்டு உயிர்துறந்த இஸ்பானிய மறைமாவட்ட அருள்பணி Salvatore Valera Parra, சுவிட்சர்லாந்தில் 1896ம் ஆண்டு பிறந்து, இத்தாலியில் 1974ம் ஆண்டு உயிர்நீத்த, பிரான்சிஸ்கன் துறவுசபையின் அருள்பணி Leo Veuthey ஆகியோரின் புண்ணியத்துவ வாழ்வு குறித்த விவரங்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும், இத்தாலியில் பிறந்து, காங்கோ குடியரசில் எபோலா பெருந்தொற்று நோயாளர்களிடையே பணியாற்றியபோது, அவர்களை விட்டு அகல மறுத்து 1995ம் ஆண்டு மே மாதம் உயிரிழந்த இறையடியார்களான, அருள்சகோதரிகள் Annelvira, Vitarosa Zorza, Danielangela Sorti  ஆகியோரின் புண்ணிய வாழ்வு பண்புகள் குறித்த விவரங்களும் திருத்தந்தையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதே அருள்சகோதரிகளுடன் இதே சுழலில் பணியாற்றி உயிர் துறந்த, இதே துறவு சபையைச் சேர்ந்த மேலும் மூன்று இறையடியார்களான, அருள்சகோதரிகள் Floralba Rondi, Clarangela Ghilardi, Dinarosa Belleri ஆகியோர் குறித்த விவரங்கள், ஏற்கனவே, இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி, திருத்தந்தையின் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2021, 14:30