தேடுதல்

Vatican News
கரக்கோஷ் அமல அன்னை ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் கரக்கோஷ் அமல அன்னை ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

கரக்கோஷ் சமுதாயத்தினருக்கு திருத்தந்தையின் உரை

வானத்திலிருந்து புனிதர்கள் உங்களை கண்காணித்து வருகின்றனர். அதேபோல், பக்கத்து வீட்டுப் புனிதர்களும் உங்கள் நடுவில் மிக அதிகமாக இருக்கின்றனர். அவர்களோடு இணைந்து நம்பிக்கை பயணம் செய்யுங்கள் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கரக்கோஷ் சமுதாயத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்த வேளையில், அவர் வழங்கிய உரை, மற்றும் மூவேளை செப உரைகளின் சுருக்கம்:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, காலை வணக்கம்.

உங்களை நான் காணும்போது, கரக்கோஷ் மக்களின் செறிவுமிக்க கலாச்சாரத்தையும், பன்முகத்தன்மை கொண்ட மத உணர்வுகளையும் காண்கிறேன். அதேவேளையில், இப்பகுதியைக் காணும்போது, இது எவ்வளவுதூரம் சிதைக்கப்பட்டுள்ளது என்பதையும், எவ்வளவுதூரம் இது கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதையும் வேதனையுடன் காண்கிறேன்.

நாம் இங்கே கூடியிருப்பதற்கு ஒரு முக்கிய நோக்கம் உள்ளது. தீவிரவாதமும், மரணமும்  இறுதிச் சொற்கள் அல்ல, அந்த இறுதிச்சொற்கள், கடவுளுக்கும், மரணத்தை வென்ற இறைமகனுக்கும் உரியவை என்பதைச் சொல்லவே, நாம் இங்கு கூடியிருக்கிறோம். உங்கள் மூதாதையர்களின் எடுத்துக்காட்டு உங்கள் முன் உள்ளது. ஒருபோதும் ஏமாற்றாத கடவுள்மீது நம்பிக்கை கொண்டு, அவர்கள் தங்கள் உலகப்பயணத்தை மேற்கொண்டனர். அவர்கள் விட்டுச்சென்ற ஆன்மீக பாரம்பரியத்தை அரவணைத்துக்கொள்ளுங்கள்! அதுவே, உங்கள் சக்தி! மீண்டும் கட்டியெழுப்பவும், சீரமைக்கவும் இதுவே தகுந்த நேரம். இதில் நீங்கள் தனித்து விடப்படுவதில்லை. திருஅவை முழுவதும் உங்கள் அருகில், தங்கள் இறைவேண்டல் வழியாகவும், உதவிகள் வழியாகவும் இணைந்துள்ளது.

அன்பு நண்பர்களே, இங்குள்ள கட்டடங்களை, மீண்டும் கட்டியெழுப்பும் இந்நேரத்தில், குடும்பங்களையும், சமுதாயத்தையும் கட்டியெழுப்பவேண்டும். இறைவாக்கினர் யோவேல் கூறுவதுபோல், "உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்" (காண்க யோவேல் 2:28).

முதியோரும், இளையோரும் இணைந்து வரும்போது என்ன நடக்கும்? முதியோர் காணும் கனவுகள், இளையோரின் வழியே நனவாகும். இறைவன் வழங்கிய கொடைகள் அடுத்தடுத்து வரும் சந்ததிகளுக்கு வழங்கப்படும். நமது குழந்தைகளைக் காணும்போது, அவர்களுக்கு ஒரு நாட்டையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மட்டும் விட்டுச்செல்லப்போவதில்லை. மாறாக, மத நம்பிக்கையில், வாழும் கனிகளையும் விட்டுச்செல்கிறோம்.

கடவுள் நம்மைவிட்டு விலகியிருப்பதுபோலவும், செயலற்று இருப்பதுபோலவும் தோன்றும்போது, நம் நம்பிக்கை தடுமாறும். போரின் இருள் உங்களைச் சூழ்ந்தபோது, உலகளாவிய பெருந்தொற்று தாக்கியபோது, உங்கள் நம்பிக்கை தடுமாறியது. அவ்வேளைகளில், இயேசு உங்கள் பக்கம் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்பிக்கையை இழக்காமல், கனவு காணுங்கள்! வானத்திலிருந்து புனிதர்கள் உங்களை கண்காணித்து வருகின்றனர். அதேபோல், பக்கத்து வீட்டுப் புனிதர்களும் உங்கள் நடுவில் இருக்கின்றனர் (Gaudete et Exsultate, 7). இந்த நாட்டில் அவர்கள் மிக அதிகமாக இருக்கின்றனர். அவர்களோடு இணைந்து நம்பிக்கைதரும் எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்யுங்கள்.

டோஹா (Doha) அவர்கள் சொன்னது, என்னை ஆழமாக பாதித்தது. தீவிரவாதத் தாக்குதலிலிருந்து தப்பித்தவர்களுக்கு அதிகமாகத் தேவைப்படுவது மன்னிப்பு என்று அவர் கூறினார். மன்னிப்பு என்பது, மிக முக்கியமான ஒரு சொல். நாம் கிறிஸ்தவர்களாக வாழ மன்னிப்பு மிகவும் அவசியம்.

அருள்பணி அம்மர் (Ammar) அவர்களே, தீவிரவாதத் தாக்குதல்களில், போர்களில் நிகழ்ந்த அனைத்திற்கும் இறைவனுக்கு நன்றி என்று சொன்னீர்கள். தீமைகளிலும், நோயிலும், மரணத்திலும் கடவுளின் வாக்குறுதிகள் உள்ளன என்பதை உணரும்போது நாம் நன்றியால் நிறைகிறோம். கடந்த கால நினைவுகள், நம் நிகழ்காலத்தை வடிவமைத்து, எதிர்காலத்திற்கு அழைத்துச்செல்கின்றன.

எல்லா நேரங்களிலும், நாம் கடவுளுக்கு நன்றி கூறி, அவர், இந்த நிலத்திற்கும், இங்கு வாழும் மக்களுக்கும் அமைதியையும், மன்னிப்பையும் வழங்க இறைவேண்டல் புரிவோம். வாழ்வுக் கலாச்சாரத்தையும், ஒப்புரவையும், உடன்பிறந்த அன்பையும் நோக்கிய மனமாற்றத்தை அனைவரும் பெறுவதற்கு நாம் அயர்வின்றி செபிப்போம்.

நான் இந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் வந்தபோது, அமல அன்னை ஆலயத்தின் மேலிருக்கும் மரியாவின் திரு உருவத்தைக் கண்டேன். அவரிடம், இந்த நகரை, முழுவதுமாக நான் அர்ப்பணிக்கிறேன். இந்த அன்னையின் திரு உருவமும் மரியாதையின்றி, சேதமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த அன்னை, அனைவரையும் அன்புடன் கண்ணோக்குகிறார். இதுவே அன்னையர் செய்வது: அவர்கள் ஆறுதலைத் தருகின்றனர், வாழ்வை வழங்குகின்றனர். இப்பகுதியில் வாழும் அனைத்து அன்னையருக்கும், பெண்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியைக் கூறுகிறேன். இத்தனை தவறுகள் நிகழ்ந்தபோதும், அவர்கள் துணிவுடன் இந்த நாட்டில் வாழ்வை வழங்கி வருகின்றனர். பெண்கள், மதிக்கப்படுவார்களாக! அவர்களுக்குரிய மாண்பும், வாய்ப்பும் வழங்கப்படட்டும்!

நாம் அனைவரும் இணைந்து அன்னையிடம் மன்றாடுவோம். அவரது பரிந்துரையின் கீழ் உங்கள் அனைவரையும் நான் ஒப்படைக்கிறேன். எனக்காக செபிக்க மறவாதீர்கள்.

07 March 2021, 12:25