வறட்சியால் நீர்வரத்து குறைந்து காணப்படும் தாய்வான் அணை ஒன்று வறட்சியால் நீர்வரத்து குறைந்து காணப்படும் தாய்வான் அணை ஒன்று  

அனைவருக்கும் சுத்த நீர் கிடைக்க உழைத்து வருவோருக்கு நன்றி

திருத்தந்தை : மாபியா குற்றக் கும்பலுக்கு பலியானவர்களை நினைவுகூர்வோம், குற்றக்கும்பலுக்கு எதிரான போராட்டத்திற்கான அர்ப்பணத்தில் உறுதியாயிருப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில் அமலில் இருக்கும், கோவிட்-19 ஊரடங்கு உத்தரவுகளை கருத்தில் கொண்டு, மக்கள் புனித பேதுரு வளாகத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க உதவும் நோக்கத்தில், தன் நூலக அறையிலிருந்தே, மார்ச் 21, ஞாயிறு, நண்பகல் மூவேளை செபவுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், மாபியா குற்றக் கும்பலுக்குப் பலியானவர்களை நினைவுகூரும் தேசிய நாள் இத்தாலியில் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படுவது பற்றி குறிப்பிட்டார்.

மாபியா குற்றக் கும்பலுக்கு பலியானவர்களை நினைவுகூர்வதையும், இக்குற்றக் கும்பலுக்கு எதிரான போராட்டத்திற்கான அர்ப்பணத்தை உறுதிப்படுத்துவதையும் வலியுறுத்தும் இந்நாளில், 'மரணத்தின் சாலைகள்' என இக்குற்றக் கும்பலை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கடுமையாக சாடியதை நினைவுகூர்வோம் என்ற அழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் இந்த மாபியா கும்பல், தற்போதைய பெருந்தொற்று காலத்தைப் பயன்படுத்தி, இலஞ்ச ஊழல், மற்றும் சுரண்டல்கள் வழியாக தங்களை வளப்படுத்தி வருகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

பாவத்தின் கட்டமைப்பு முறைகளாக இருக்கும் இந்த மாபியா அமைப்பு முறைகள், கிறிஸ்துவின் நற்செய்திக்கு எதிராகச் செல்வதுடன், தங்கள் விசுவாசத்தை, விலையாகக் கொடுத்து, சிலைவழிபாட்டை வாங்கியுள்ளனர்  என எடுத்துரைத்தார்.

மாபியாவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் அதேவேளை, இந்த குற்றக்கும்பலுக்கு எதிரான நம் அர்ப்பணத்தை உறுதிப்படுத்துவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அத்துடன், இந்திங்கள், மார்ச் 22ம் தேதி, அனைத்துலக தண்ணீர் நாள் சிறப்பிக்கப்படுவது குறித்தும் நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின், மாற்றுக் காணமுடியாத இந்த வியத்தகு கொடை குறித்து ஆழமாக சிந்திப்பதற்கு, இந்த உலக நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது என எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு 'சகோதரி நீர்' என்பது, வெறும் ஒரு பொருளல்ல, மாறாக, அது ஓர் அகில உலக அடையாளமாக, நலவாழ்வின் ஆதரமாக விளங்குகிறது என மேலும் விளக்கிக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலகின் எண்ணற்ற சகோதரர் சகோதரிகளுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை, அப்படியே கிடைத்தாலும், அது சுத்த நீராக இருப்பதில்லை என்ற கவலையையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் சுத்த நீரும், நல ஆதரவுச் சேவைகளும் தேவைப்படுகின்றன என்பதை நினைவூட்டி, இதற்கென பணியாற்றும் அனைவருக்கும் தன் ஊக்கத்தை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அனைவருக்கும் நீர் கிடைக்க உழைத்துவருபவர்களை நினைவுகூரும் அதேவேளையில், தன் தாய் நாடாகிய அர்ஜென்டினாவில், 'நீர் பல்கலைக்கழகம்' என்ற பெயரில் நீரின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் அமைப்பு குறித்து எடுத்துரைத்து, அவர்களுக்கு நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கணனி வலைத்தொடர்பு வழியாக தனக்கு செவிமடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறியத் திருத்தந்தை, குறிப்பாக, நோயுற்றுள்ளோர், மற்றும், தனிமையில் வாழ்வோரை, தனிப்பட்ட விதத்தில் தான் நினைவுகூர்வதாகவும் எடுத்துரைத்து, தன் உரையை நிறைவுச் செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2021, 13:00