பெல்ஜிய பாப்பிறைக் கல்லூரியின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பெல்ஜிய பாப்பிறைக் கல்லூரியின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

பெல்ஜிய பாப்பிறைக் கல்லூரிக்கு திருத்தந்தை வாழ்த்து

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களை மாணவராகக் கொண்டிருந்த பெல்ஜிய பாப்பிறைக் கல்லூரி, தன் 175வது ஆண்டை நிறைவு செய்திருப்பதையொட்டி, மகிழ்வையும், பாராட்டுக்களையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களை மாணவராகக் கொண்டிருந்த பெல்ஜிய பாப்பிறைக் கல்லூரி, தன் 175வது ஆண்டை நிறைவு செய்திருப்பதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மகிழ்வையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

உரோம் நகரில் இயங்கிவரும் பெல்ஜிய பாப்பிறைக் கல்லூரி தன் 175வது ஆண்டு நிறைவு சிறப்பிக்கும் வேளையில், இக்கல்லூரியின் பொறுப்பாளர்கள், பேராசியர்கள் மற்றும் மாணவர்களை, மார்ச் 18, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தவேளையில், திருத்தந்தை, அவர்களுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

புனித யோசேப்பை பாதுகாவலராகக் கொண்டுள்ள கல்லூரி

புனித யோசேப்பை பாதுகாவலராகக் கொண்டுள்ள இக்கல்லூரியின் உறுப்பினர்கள், இப்புனிதரின் திருநாளையொட்டி தன்னைச் சந்திக்க வந்திருப்பதை குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு வழங்கப்பட்டுள்ள மக்களை பாதுகாத்து, வழிநடத்திச் செல்வதற்குத் தேவையான வழிமுறைகளை, இப்புனிதரிடம் நாம் கற்றுக்கொள்ளமுடியும் என்று கூறினார்.

நம் ஆன்மீக மற்றும் பணிவாழ்வுக்கு புனித யோசேப்பு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்பதை பெல்ஜிய கல்லூரி மாணர்வகளிடம் கூறிய திருத்தந்தை, புதிதாக ஒரு பணித்தளத்திற்கு செல்லும் அருள்பணியாளர், தன்னிடம் உள்ள கருத்துக்களை மக்கள் மீது திணிப்பதை விடுத்து, தனக்கு அளிக்கப்பட்டுள்ள மக்களை அன்புகூர்வதற்கு எடுக்கும் முயற்சிகளில் புனித யோசேப்பு நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்று எடுத்துரைத்தார்.

ஒரு வார்த்தையும் பேசாமல், இறைவனின் பிரசன்னத்தில் ஒவ்வொரு நாளும் வாழ்ந்துவந்த புனித யோசேப்பு, பணிவு, ஆழ்நிலை தியானம், மற்றும், உள்ளார்ந்த சுதந்திரத்துடன் இறைவனின் விருப்பத்தைத் தேடுதல், ஆகிய முயற்சிகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் என்று திருத்தந்தை, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கனவு காண்பவராக, புனித யோசேப்பு

புனித யோசேப்பை கனவு காண்பவர் என்று கூறும்போது, அவர் இவ்வுலகை மறந்து கனவுலகில் மிதந்தவர் என்று பொருள்கொள்வதைவிட, தான் கண்ணால் காண்பதைத் தாண்டி, கடவுளின் திட்டத்தை புரிந்துகொள்பவர் என்று பொருள்கொள்வதே அவரது கனவுகாணும் திறமையை சரிவரப் புரிந்துகொள்வதற்கு வழி என்று திருத்தந்தை கூறினார்.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இறைவன் வகுத்துள்ள திட்டங்களைக் குறித்து கனவு காண விழையும் அருள்பணியாளர்களுக்கு, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மரியாவையும், இயேசுவையும் இறைவனின் திட்டத்தோடு பொருத்தி கனவு கண்ட புனித யோசேப்பு பெரும் உந்துசக்தியாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெல்ஜிய பாப்பிறை கல்லூரி உறுப்பினர்களுக்கு வழங்கிய வாழ்த்துரையில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2021, 14:07