மனித விற்பனையைத் தடுக்கும் பொருளாதாரம்

அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்போர் தங்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பி, சமுதாயத்தோடு ஒன்றிணைந்து, பொதுநலனுக்கு சேவையாற்ற உதவுவதாக நாம் வழங்கும் உதவிகள் அமையவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித விற்பனைக்கு எதிராக இறைவேண்டல் மற்றும், விழிப்புணர்வு கொள்ளும் 7வது உலக நாள் இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, சிறப்பு காணொளிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதர்கள் சந்தைப் பொருட்களாக விற்கப்படுவதைத் தவிர்க்கும் பொருளாதாரம், என்ற தலைப்பில் இந்த ஆண்டு இடம்பெறும் உலக இறைவேண்டல் நாளில் ஆன்மீக முறையில் இணைந்திருப்போர், மற்றும், இதற்காக உழைப்போர் அனைவருக்கும் இச்செய்தியை வழங்குவதாக உரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கருத்திற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் மதங்களிடையே இறைவேண்டல் நிகழ்வுகள், இடம்பெறுவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

மக்கள் சந்தைப் பொருட்களாக விற்கப்படுவதைக் குறித்து நினைவுகூர்ந்து, அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதோடு, இணைந்து போராடவும் அழைப்பு விடுக்கும் இத்தினம், சமுதாய மேம்பாட்டுக்கான உறுதியான செயல்பாடுகளையும் எதிர்பார்க்கிறது என தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்போர் தங்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பி, சமுதாயத்தோடு ஒன்றிணைந்து, பொதுநலனுக்கு சேவையாற்ற உதவுவதாக நாம் வழங்கும் உதவிகள் அமையவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அடிமைத்தனங்களால் துயருறும் மக்களின் துன்பங்களையும், ஏமாற்றங்களையும் அகற்றவும், நம்பிக்கையை உயிரூட்டமுள்ளதாக வைத்திருக்கவும்,  மனிதாபிமானம், மற்றும், மனவுறுதியுடன் பிரச்சனைகளை அணுகவும், உறுதியான செயல்பாடுகளுக்கும் இறைவேண்டல் நமக்கு உதவுகிறது என உரைக்கிறது திருத்தந்தையின் காணொளி செய்தி.

புனித ஜோசப்பின் பக்கித்தா அவர்களின் திருவிழா அன்று இந்நாள் சிறப்பிக்கப்படுவது, அவரின் விசுவாசம் மற்றும் இறைவேண்டல் கூறுகளை நமக்கு நினைவூட்டுவதாக உள்ளது, ஏனெனில், அவர் வாழ்க்கை சான்று, எப்போதும், துயருறும் மக்கள், அவர்களின் குடும்பம், மற்றும், சமுதாயத்தை மையம் கொண்டதாக இருந்தது என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மக்கள் சந்தைப் பொருளாக விற்கப்படுவதை தவிர்க்கும் பொருளாதாரம் என்ற தலைப்பில் இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்டும் இந்நாளில், அடிமைத்தனங்களால் துயருறும் மக்கள்,  கொரோனா பெருந்தொற்று  காரணமாக,சமுதாயத்தில் ஒன்றிணைவது சிரமமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் மீது அக்கறை கொண்ட பொருளாதாரம் என்பது ஒருமைப்பாட்டுடன் கூடிய பொருளாதாரம், அதுவே சமுதாய கட்டுமானத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும் எடுத்துரைத்துள்ளார்.

மக்கள் சந்தைப் பொருளாக விற்கப்படுவதை தவிர்க்கும் பொருளாதாரமே, நீதியை ஊக்குவிக்கும் பொருளாதாரமாக இருக்கமுடியும் என தன் காணொளிச் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சந்தை வியாபாரம் தொடர்புடைய விதிகள் அனைத்தும், மனிதாபிமானம் நிறைந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இருக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளார்.

மனிதர்களைச் சந்தைப் பொருளாக விற்காத ஒரு பொருளாதாரம், மனத்துணிவுடன் கூடிய பொருளாதாரமாகும், ஏனெனில், அது குறுகிய கால இலாப நோக்கத்துடன் செயல்படாமல், தூரநோக்குடன், அதிலும் மக்களை மையம் கொண்டதாக செயல்படும் என மேலும் தன் காணொளிச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2021, 15:20