லூர்து நகர் கெபியில் கூடியி்ருக்கும் மக்கள் திருத்தந்தையின் செய்திக்கு செவிமடுத்தல் - கோப்புப் படம் லூர்து நகர் கெபியில் கூடியி்ருக்கும் மக்கள் திருத்தந்தையின் செய்திக்கு செவிமடுத்தல் - கோப்புப் படம்  

நோய்கள் நீங்க, லூர்து அன்னையின் பரிந்துரையை வேண்டுவோம்

"லூர்து நகர் அன்னையின் பரிந்துரை வழியே, தற்போதைய பெருந்தொற்றினால் துன்புறும் அனைவருக்கும், உடல், மற்றும், ஆன்மீக அளவில் இறைவன் நலம்வழங்க வேண்டிக்கொள்வோம்." - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 11, இவ்வியாழனன்று, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளும், நோயாளரின் உலக நாளும் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு டுவிட்டர் செய்திகளை, @pontifex என்ற வலைத்தள முகவரியில் பதிவு செய்திருந்தார்.

"நோயுற்றோரின் பாதுகாவலரான லூர்து நகரின் நமது அன்னையின் பரிந்துரை வழியே, தற்போதைய பெருந்தொற்றினால் துன்புறும் அனைவருக்கும் உடல் மற்றும் ஆன்மீக அளவில் இறைவன் நலம்வழங்க வேண்டிக்கொள்வோம். துன்புறும் அனைவருக்கும் உதவிகள் செய்துவருவோருக்கு இறைவன் உறுதி அளிப்பாராக" என்ற சொற்களை, திருத்தந்தை தன் முதல் டுவிட்டர் பதிவாக வெளியிட்டார்.

1992ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட நோயாளரின் உலக நாள், இவ்வாண்டு 29வது முறையாக சிறப்பிக்கப்பட்டதை நினைவுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"நோயாளரின் உலக நாள், நோயுற்றிருப்போர் மீதும், அவர்களுக்கு உதவிகள் செய்வோர் மீதும் நம் சிறப்பு கவனத்தைத் திருப்புகிறது. கொரோனா தொற்றுக்கிருமியின் பெருந்தொற்றின் விளைவுகளால் துன்புறுவோரை நான் தனிப்பட்ட முறையில் எண்ணிப்பார்க்கிறேன். இவர்கள் அனைவரோடும், குறிப்பாக, மிகவும் வறுமையுற்றோருடனும் என் அருகாமையைத் தெரிவிக்கிறேன்" என்ற சொற்கள், திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், பிப்ரவரி, 9, இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இமய மலைப் பகுதியில், பிப்ரவரி 7, கடந்த ஞாயிறன்று, பனிப்பாறை உடைந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்ந்து இறைவேண்டல் செய்ததையடுத்து, அதே வேண்டுதலை, தன் டுவிட்டர் செய்தியாக, ஆங்கில மொழியில் மட்டும் வெளியிட்டார்.

"இந்தியாவில், பனிப்பாறை உடைந்ததால் உருவான வெள்ளம் ஏற்படுத்திய அழிவினால் பாதிக்கப்பட்ட அனைவரோடும் நான் உள்ளத்தால் நெருங்கியிருக்கிறேன். இந்த வெள்ளத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர், மற்றும் இதனால் காயமுற்றோர் அனைவருக்காகவும் செபிக்கிறேன்" என்ற சொற்களை திருத்தந்தை தன் டுவிட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2021, 14:11