காங்கோ குடியரசின் Bukavu என்ற ஊரில் கத்தோலிக்க குழு ஒன்றைச் சந்திக்கும் இத்தாலியத் தூதர் லூக்கா அத்தனாசியோ - கோப்புப் படம் காங்கோ குடியரசின் Bukavu என்ற ஊரில் கத்தோலிக்க குழு ஒன்றைச் சந்திக்கும் இத்தாலியத் தூதர் லூக்கா அத்தனாசியோ - கோப்புப் படம் 

இத்தாலியத் தூதர் கொலை – திருத்தந்தையின் தந்திச் செய்தி

காங்கோ குடியரசில், அமைதியை மீண்டும் நிலைநாட்டவும், அந்நாட்டில் உடன்பிறந்த உணர்வை வளர்க்கவும், இத்தாலியத் தூதர் லூக்கா அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டிவந்தார் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசில் பணியாற்றிவந்த இத்தாலியத் தூதர் கொல்லப்பட்டதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 23, இச்செவ்வாய் மாலையில், இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா (Sergio Mattarella) அவர்களுக்கு தன் அனுதாபங்களைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியொன்றை அனுப்பினார்.

காங்கோ குடியரசில், பிப்ரவரி 22, திங்களன்று, ஐ.நா.நிறுவனத்தின் வாகனம் ஒன்றில் பயணித்த இத்தாலிய தூதர் லூக்கா அத்தனாசியோ (Luca Attanasio), அவரது மெய்காப்பாளராக உடன் பயணித்த காவல்துறை அதிகாரி வித்தோரியோ இயாக்கோவாச்சி (Vittorio Iacovacci), மற்றும், அந்த வாகனத்தை ஓட்டிச்சென்ற காங்கோ நாட்டு ஓட்டுனர், முஸ்தபா மிலாம்போ (Mustapha Milambo) ஆகிய மூவரும் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட மூவரின் குடும்பத்தினர், தூதரகப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகிய அனைவருக்கும், இந்த அதிகாரிகளை இழந்திருக்கும் இத்தாலிய அரசுத்தலைவருக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலிய தூதர், லூக்கா அவர்கள், மனிதப் பண்புகளிலும், கிறிஸ்தவ விழுமியங்களிலும் ஊன்றி இருந்தவர் என்றும், 30 வயதே நிறைந்த காவல்துறை அதிகாரி வித்தோரியோ அவர்கள், தன் பணியில் மிகக் கருத்துடன் செயலாற்றிவர் மற்றும், விரைவில் திருமணம் செய்து குடும்பத்தை நிறுவ திட்டமிட்டிருந்தவர் என்றும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியிழந்து தவிக்கும் காங்கோ குடியரசில், அமைதியை மீண்டும் நிலைநாட்டவும், அந்நாட்டில் உள்ள பல்வேறு குழுக்களிடையே உடன்பிறந்த உணர்வை வளர்க்கவும், தூதர் லூக்கா அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டிவந்தார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பாக கூறியுள்ளார்.

இறந்த இவ்விரு இத்தாலிய மகன்களையும் இறைவனின் பராமரிப்பில் ஒப்படைக்குமாறு, இத்தாலிய தலைவரிடம் கூறியுள்ள திருத்தந்தை, எந்த ஒரு நற்செயலும் இறைவனுக்கு முன் வீணாகப்போவதில்லை என்பதையும், குறிப்பாக, அந்த நற்செயல்கள் துன்பத்திலும், தியாகத்திலும் முடிவடையும்போது, அவை கூடுதல் மதிப்பு பெறுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2021, 15:32