'மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்' 'மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்' 

உரோமைய ஆயரும், கெய்ரோ உயர் குருவும் இணைந்து...

உலக நாள்காட்டியில், பிப்ரவரி 4ம் தேதி, ஒரு முக்கிய நினைவுநாளாக இடம்பெற்றுவிட்டது - கர்தினால் மைக்கில் செர்னி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக நாள்காட்டியில், பிப்ரவரி 4ம் தேதி, ஒரு முக்கிய நினைவுநாளாக இடம்பெற்றுவிட்டது என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பணியை ஒருங்கிணைக்கும் கர்தினால் மைக்கில் செர்னி (Michael Czerny) அவர்கள், கூறினார்.

பிப்ரவரி 4 இவ்வியாழனன்று, 'மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்' முதல் முறையாக சிறப்பிக்கப்படுவதையொட்டி, கனடா நாட்டு இயேசு சபையினர் உருவாக்கியுள்ள igNation என்ற வலைத்தளத்தில், கர்தினால் செர்னி அவர்கள், இந்நாள் உருவாக காரணமாக இருந்த பல்வேறு அம்சங்களைக் குறித்து,  தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

2019ம் ஆண்டு பிப்ரவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அபு தாபியில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, அவரும் அல் அசார் உயர் குரு அகமத் அல்-தய்யெப் அவர்களும் இணைந்து கையொப்பமிட்ட 'உலகளாவிய உடன்பிறந்த நிலை' என்ற அறிக்கை, 20 மாதங்களுக்குப் பின், 'Fratelli tutti' என்ற திருமடல் வெளியாவதற்கு வழி வகுத்தது என்று, கர்தினால் செர்னி அவர்கள் கூறியுள்ளார்.

உரோமைய ஆயரும், கெய்ரோவின் உயர் குருவும் இணைந்து வெளியிட்ட இந்த அறிக்கையினால் ஈர்க்கப்பட்ட உலக நாடுகள், 2020ம் ஆண்டு, டிசம்பர் 21ம் தேதியன்று ஐ.நா. நிறுவனத்தின் பொது அவையில், பிப்ரவரி 4ம் தேதி, ஒவ்வோர் ஆண்டும், 'மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாளாக' சிறப்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை வெளியிட்டன என்பதை கர்தினால் செர்னி அவர்கள், தன் பகிர்வில் நினைவுகூர்ந்தார்.

இந்த முதல் உலக நாள் அனுபவத்தால் தூண்டப்பட்டு, 2022ம் ஆண்டு முதல், உலகெங்கிலும் உள்ள மறைமாவட்டங்கள், பல்சமய, பன்முகக் கலாச்சார நிகழ்வுகளை திட்டமிட திருஅவை அழைப்பு விடுக்கவுள்ளது என்பதையும், கர்தினால் செர்னி அவர்கள் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2021, 15:08