Maestro di San Bartolo எழுதிய "Abbi a cuore il Signore" ஆன்மீகப் பயிற்சி நூல் Maestro di San Bartolo எழுதிய "Abbi a cuore il Signore" ஆன்மீகப் பயிற்சி நூல் 

ஆண்டு தியானத்திற்கு உதவும் Abbi a cuore il Signore நூல்

Abbi a cuore il Signore என்ற நூல், எண்ணற்ற விவிலிய மேற்கோள்களுடன் ஆழ்ந்த தியானச் சிந்தனைகளைக் கொண்டிருக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், இம்மாதம் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை, தங்களது ஆண்டு தியானத்தை, தனித்தனியாக மேற்கொள்ளவிருக்கும்வேளை, அவர்களின் தியானத்திற்கு உதவியாக, ஆன்மீக நூல் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார்.

திருப்பீட உயர் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் திருத்தந்தை வழங்கியுள்ள, “இதயத்தில் ஆண்டவரைக் கொண்டிரு” (Abbi a cuore il Signore) என்ற நூல், 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த, Maestro di San Bartolo எனப்படும் துறவியின் கையெழுத்துப் பிரதியாகும். இதனை, இயேசு சபை அருள்பணி Daniele Libanori அவர்கள், நூலாக வடிவமைத்துள்ளார். இந்த நூலை, புனித பவுல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும், “Abbi a cuore il Signore” என்ற நூலோடு, ஒரு மடலையும் இணைத்து நன்கொடையாக வழங்கியுள்ளதோடு, தியான காலத்தில் அவர்களுடன் தன் அருகாமையையும் வெளிப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த ஆன்மீக தியானத்தை, ஒவ்வொருவரும், தங்களுக்கு மிகவும் வசதியான இடங்களில் மேற்கொள்ளுமாறு ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை, இந்த நூல், அவர்களின் ஆன்மீக வாழ்வுக்கு உதவும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். 

இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள அருள்பணி Libanori அவர்கள், இந்த நூல் எண்ணற்ற விவிலிய மேற்கோள்களுடன் ஆழ்ந்த தியானச் சிந்தனைகளைக் கொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, இத்தாலியின் அரிச்சா என்ற ஊரில், விண்ணகப் போதகர் தியான இல்லத்தில், திருத்தந்தையும், திருப்பீட தலைமையக உயர் அதிகாரிகளும் தங்களின் ஆண்டு தியானத்தை மேற்கொண்டு வந்தனர். இந்த ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தால், இவர்கள் அனைவரும் தனித்தனியாக ஆண்டு தியானத்தை  மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2021, 14:00