இத்தாலியில் சிறப்பிக்கப்பட்ட வாழ்வின் நாளன்று, மூவேளை செப உரையின்பொது - 070221 இத்தாலியில் சிறப்பிக்கப்பட்ட வாழ்வின் நாளன்று, மூவேளை செப உரையின்பொது - 070221 

மனித விற்பனைக்கு எதிராக செபிக்கும் உலக நாள்

திருத்தந்தை : வாழ்வின் மீது மேற்கொள்ளப்படும் அனைத்து தாக்குதல்களிலிருந்தும் குணம்பெற உதவ வேண்டியது, சமுதாயத்தின் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெரியோரின் துணையின்றி வாழும் பல ஆயிரக்கணக்கான வளர்இளம் பருவத்தினர் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித விற்பனைக்கு எதிராக இறைவேண்டல் புரியும் உலக நாள், பிப்ரவரி 8, இத்திங்களன்று சிறப்பிக்கப்படுவது குறித்தும் எடுத்துரைத்தார்.

தன் பாப்பிறை இல்லத்தின் மேல்மாடி சன்னல் வழியாக ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், தங்கள் சொந்த நாடுகளையும் குடும்பங்களையும் விட்டு வெளியேறி, பெரியோரின் துணையின்றி அடைக்கலம் தேடும் வளர்இளம் பருவத்தினர், பல்வேறு உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

பால்கன் பகுதி பாதையைப் பயன்படுத்தி, அடைக்கலம் தேட  முயலும் புலம்பெயர்ந்தோர் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து தன் கவனத்திற்கு கொணரப்பட்டுள்ளதாகவும், உலகின் பல்வேறு இடங்களில் இத்தகைய துன்பநிலைகள் தொடர்வதாகவும் கவலையைத் தெரிவித்தார் திருத்தந்தை.

அடிமைத்தனத்தின் துயர்களையும் அவமானங்களையும் அறிந்திருந்த, சூடான் நாட்டைச் சேர்ந்த புனிதர் ஜோசப்பின் பக்கித்தாவின் திருவிழாவான பிப்ரவரி 8ம் தேதியன்று, மனித விற்பனைக்கு எதிராக இறைவேண்டல் புரியும் உலக நாள் ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப்படுவதைப் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதர்கள் சந்தைப்பொருட்களாக கடத்தப்படுவதை ஆதரிக்காத ஒரு பொருளாதாரத்தை உருவாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், பிப்ரவரி 7, இஞ்ஞாயிறன்று, இத்தாலியில் சிறப்பிக்கப்பட்ட வாழ்வின் நாள் குறித்தும், தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வின் மீது மேற்கொள்ளப்படும் அனைத்து தாக்குதல்களிலிருந்தும் குணம்பெற உதவ வேண்டியது, சமுதாயத்தின் கடமை என்பதையும், குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்துவரும் இத்தாலியின் வருங்காலம் ஆபத்திலுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

1978ம் ஆண்டு, இத்தாலிய ஆயர் பேரவையால் உருவாக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் வாழ்வுக்கு ஆதரவான நாள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் வழங்கிய உன்னத கொடையான சுதந்திரத்தைப் பயன்படுத்தி, வாழ்வின் நலனுக்காகவும், நமக்கு அடுத்திருப்பவர், மற்றும், நமது நலனுக்காகவும் உழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 February 2021, 13:16