அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோரின் உலக நாள் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோரின் உலக நாள் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை - துறவியர் பொறுமையைக் கடைபிடிக்கவேண்டும்

சிமியோன், அன்னா ஆகிய இருவரும் முதிர்ந்த வயதுள்ளவர்கள் என்றாலும், அவர்கள், இவ்வுலகில் தொடர்ந்து சந்தித்த துயரங்கள் அவர்களது பொறுமையை பறிப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணிக்கும் திருநாளன்று, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோரின் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் இச்செவ்வாய் மாலையில் திருப்பலியை தலைமையேற்று நடத்தி, மறையுரை வழங்கினார்.

துறவற வாழ்வை மேற்கொண்டுள்ள இருபால் துறவியரும் தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்கு செவிமடுத்து, புதிய வழிகளைத் தேடி கண்டுபிடித்து, துணிவுடன் முன்னேறிச் செல்வதற்கு பொறுமையைக் கடைபிடிக்குமாறு திருத்தந்தை தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

சிமியோன் வாழ்வில் பொறுமை

எருசலேம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட குழந்தை இயேசுவை அடையாளம் கண்டுகொண்ட சிமியோன், "இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்" (லூக். 2:25) என்று கூறப்பட்டுள்ளதை, திருத்தந்தை தன் மறையுரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டினார்.

தன் வாழ்நாள் முழுவதும், சிமியோன், இறைவனின் வருகைக்காக பொறுமையுடன் காத்திருந்தார் என்பதை குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் நீண்ட வாழ்வில் துயரங்களும், சோர்வும் உண்டானாலும், அவரது உள்ளத்தில் நம்பிக்கையின் ஒளி அணையாமல் எரிந்துகொண்டிருந்தது என்று எடுத்துரைத்தார்.

தன்னைச்சுற்றி நடந்த நிகழ்வுகளால் துயருற்று, மனத்தளர்ச்சி அடையாமல், பொறுமையுடன், விழித்திருந்தால், சிமியோன், "நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன" என்று இறைவனிடம் கூறமுடிந்தது என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

இறைவனிடம் விளங்கிய பொறுமையின் பிரதிபலிப்பாக...

இவ்வுலகின் மீது சலிப்படையாமல் இறைவன் பொறுமையுடன் செயல்பட்டதால், காலம் கனிந்த வேளையில் அவர் தன் திருமகனை இவ்வுலகிற்கு அனுப்பினார் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த இறைவனிடம் விளங்கிய பொறுமையின் பிரதிபலிப்பாக சிமியோனின் பொறுமை அமைந்திருந்தது என்று கூறினார்.

துறவற வாழ்வைத் தெரிவு செய்திருப்போர் தங்கள் சொந்த வாழ்வை உற்றுநோக்குமாறு தன் மறையுரையில் அழைப்பு விடுத்த  திருத்தந்தை, ஒவ்வொருவர் வாழ்விலும் பொறுமை மூன்று நிலைகளில் வெளிப்படுவதைப்பற்றி தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட வாழ்வில், இறைவன் செயலாற்றுவதில் உருவாகும் தாமதம் ஒரு சிலரை பொறுமையிழக்கச் செய்கிறது என்பதை கூறிய திருத்தந்தை, இதனால் நாம் அடையும் துயரம், நம்மை சிறிது சிறிதாக அரித்துவிடும் புழுவைப்போல் செயலாற்றுகிறது என்று எடுத்துரைத்தார்.

தனிப்பட்ட வாழ்விலும்,  குழும வாழ்விலும் பொறுமை

நம் தனிப்பட்ட வாழ்வில் பொறுமையிழப்போர், அதேவண்ணம் குழும வாழ்விலும் பொறுமையிழந்து போகின்றனர் என்பதைச் இரண்டாவது நிலையாகச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழும வாழ்வின் உயிர் நாடியாக பொறுமை விளங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

துறவு இல்லங்களில் காணப்படும் குழும வாழ்வை ஒரு பாடகர் குழுவுடன் ஒப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, ஆண்டவர் நம்மை, தனித் தனிப் பாடகர்களாக புகழ்பெறுவதற்கு அழைக்கவில்லை, மாறாக, ஒரு சில சுவரங்களைத் தவறாகப் பாடக்கூடிய ஒரு பாடகர் குழுவின் அங்கமாக இருக்க அழைத்துள்ளார் என்று கூறினார்.

உலகத்தின் மீதும் பொறுமை

இவ்வுலகத்தோடு நாம் கொள்ளும் தொடர்பிலும் பொறுமை தேவை என்பதை தன் மூன்றாவது நிலையாகக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிமியோன், அன்னா ஆகிய இருவரும் முதிர்ந்த வயதுள்ளவர்கள் என்றாலும், அவர்கள், இவ்வுலகில் தொடர்ந்து சந்தித்த துயரங்கள் அவர்களது பொறுமையைப் பறிப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை என்பதை வலியுறுத்திக் கூறினார்.

பொறுமையைக் கடைபிடிப்போர், தங்களைக் குறித்தும், தங்கள் குழுமங்களைக் குறித்தும், இவ்வுலகைக் குறித்தும் பரிவுள்ள கண்ணோட்டம் கொண்டிருப்பர் என்பதை திருத்தந்தை, தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2021, 15:43