20 ஆண்டுகளுக்குமுன் கர்தினாலாக, பேராயர் பெர்கோலியோ

20 ஆண்டுகளுக்குமுன், திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், அப்போதைய புவனஸ் அய்ரஸ் பேராயர் பெர்கோலியோ அவர்கள் உட்பட, 44 புதிய கர்தினால்களை அறிவித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனஸ் அய்ரஸ் பேராயராகப் பணியாற்றியபோது, கர்தினாலாக உயர்த்தப்பட்டதன் இருபதாம் ஆண்டு நிறைவு, பிப்ரவரி 21, இஞ்ஞாயிறன்று இடம்பெறுகின்றது.

இருபது ஆண்டுகளுக்குமுன், அதாவது 2001ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், அப்போதைய புவனோஸ் அய்ரஸ் பேராயர்  ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள் உட்பட, 44 புதிய கர்தினால்களை திருஅவைக்கு அறிவித்தார்.

கர்தினால் பெர்கோலியோ அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி, அகில உலக கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணிக்கு, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிவுசெய்தார்.

கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், தன் பணிக்காலத்தில் ஆற்றிய மறையுரைகள் மற்றும், உரைகளைப் பின்னோக்கிப் பார்க்கும்போது, அவ்வுரைகளில் பயன்படுத்தப்பட்ட சிந்தனைகள், கடந்த 8 ஆண்டுகளாக, அவரது தலைமைப் பணியில் முன்னுரிமை பெறுவதைக் காண முடிகின்றது.

வரவேற்கும் ஓர் இதயம்

1969ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி, தனது பிறந்த நாளுக்கு, நான்கு நாள்களுக்குமுன், தனது 33வது வயதில் இயேசு சபையில் அருள்பணித்துவ வாழ்வுக்கு திருநிலைப்படுத்தப்பட்ட கர்தினால் பெர்கோலியோ அவர்கள், இரக்கம், திறந்த கதவுகள், பரிவிரக்கம் ஆகிய பாதைகளை, தன் அருள்பணியாளர்களுக்குச் சுட்டிக்காட்டி வந்தார்.

புனித பேதுருவின் வழிவருபவராக, திருஅவையின் தலைமைப்பணியை ஏற்றபோது, தான் ஆயர் பணிக்குத் தெரிவுசெய்த, “பரிவுகொண்டு மற்றும் தெரிவுசெய்து (miserando atque eligendo)” என்ற விருதுவாக்கையே தேர்ந்தெடுத்தார். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மீகப் பயணத்தில், இரக்கமே சிறப்பான முக்கியத்துவம் பெற்றுள்ளது.

1953ம் ஆண்டு, புனித மத்தேயு திருநாளன்று, தனது 17வது வயதில் கடவுளின் அன்பு பிரசன்னத்தை சிறப்பாக உணர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் இரக்கம், தன்னை புனித இலொயோலா இஞ்ஞாசியாரின் பாதையில் துறவுவாழ்வைத் தேர்ந்துகொள்வதற்கு அழைக்கின்றது என்று உணர்ந்தார். இவர், 1958ம் ஆண்டு, மார்ச் மாதம் 11ம் தேதி, இயேசு சபையில் நவதுறவியாகச் சேர்ந்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனஸ் அய்ரஸ் பேராயராகப் பணியாற்றியபோது, இலத்தீன் அமெரிக்காவில் முக்கிய நபராக, மக்களால் பெரிதும் அன்புகூரப்பட்டு, பேருந்துகள் மற்றும், உள்ளூர் இரயில்களில் பயணம் மேற்கொண்டார். இவர், கர்தினாலாக உயர்த்தப்படும் திருவழிபாட்டு நிகழ்வுக்கு உரோம் வந்தபோது, புதிய ஆடைகளைத் தயாரிக்காமல், 1998ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த, அவருக்குமுன்னர் பணியாற்றிய, கர்தினால் Antonio Quarracino அவர்களது ஆடையையே தனது அளவுக்கு ஏற்ப மாற்றியமைத்தார்.

கர்தினாலாக கடைசி மறையுரை

புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அவையில் கலந்துகொள்வதற்காக, 2013ம் ஆண்டில் உரோம் மாநகருக்குப் புறப்படுவதற்குமுன், அதே ஆண்டு மார்ச் 28ம் தேதி இடம்பெறவிருந்த, புனித வியாழன் எண்ணெய் மந்திரிப்பு திருப்பலிக்கென மறையுரையை தயார்செய்து வைத்திருந்தார். அந்த மறையுரை, சமுதாயத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு, திருஅவை மறைப்பணியாற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக இருந்தது. திருத்தந்தை தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, அவர் முதல் முறையாக மக்களை வாழ்த்தியபோது, நம் மத்தியில், அன்பு, உடன்பிறந்த உணர்வு, மற்றும், நம்பிக்கை ஆகிய பயணத்தின் பாதையை திருஅவை சுட்டிக்காட்டுகிறது என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2021, 19:39