உதவி வேண்டும் குரல்களை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
பல்வேறு வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு துயருறும் பெண்களுக்காக, இந்த பிப்ரவரி மாதத்தில் சிறப்பான விதத்தில் செபிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி மாத செபக்கருத்துக்கென காணொளிச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதில், மன அளவிலும், உடல் ரீதியாகவும், வார்த்தைகளாலும் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் அனைத்து பெண்களையும் நினைவுகூர்ந்து இறைவேண்டல் செய்வோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய உலகில் எத்தனையோ பெண்கள், பல்வேறு வழிகளில், எண்ணற்ற துன்பங்களை அனுபவிப்பது, அதிர்ச்சி தருவதாக உள்ளது என, தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்கள் அடையும் இத்தகைய துன்பங்கள், மனித குலத்தின் கோழைத்தனமான நடவடிக்கைகளையும், மாண்பற்ற செயல்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளன என தெரிவித்துள்ளார்.
தங்கள் மௌனத்தைக் கலைத்து, தங்கள் துயர்களுக்கு விடிவு வேண்டி அழைப்பு விடுக்கும் இவர்களின் குரல்களை நாம் ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது எனக் கூறும் திருத்தந்தை, இத்தகைய வன்முறைச் செயல்கள் குறித்து, நம் பார்வையை வேறுபக்கம் திருப்பி நாம் சென்றுவிடமுடியாது எனவும், தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.
சமுதாயத்தில் பல்வேறு வன்முறைகளால் துயர்களை அனுபவிக்கும் பெண்களின் உதவிக்கான குரல், அனைவராலும் செவிமடுக்கப்பட்டு, அவர்களுக்கு பாதுகாப்பளிக்கப்பட வேண்டும் என இம்மாதத்தில் சிறப்பான விதத்தில் இறைவேண்டல் செய்வோம் என தன் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2020ம் ஆண்டு, நவம்பர் மாதம் ஐ.நா. வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு நாளும் உலகில், குறைந்தது, 137 பெண்கள், தங்கள் குடும்ப அங்கத்தினர்களாலேயே கொலைசெய்யப்படுகின்றனர் எனவும், எண்ணற்ற பெண்கள் கடத்தப்படுவதும், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்துவரும் நிலையில், கடந்த ஆண்டின் கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, வீட்டு வன்முறைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.