தேடுதல்

Vatican News
மறைசாட்சிகளாக கொல்லப்பட்டவர்களின் திருவுருவ படங்களின் முன்னால் விசுவாசிகள் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டவர்களின் திருவுருவ படங்களின் முன்னால் விசுவாசிகள்  (AFP or licensors)

21 காப்டிக் மறைசாட்சிகள், இயேசுவின் சாட்சிகள்

21 காப்டிக் கிறிஸ்தவர்கள், Sirte கடற்கரையில் எதிர்கொண்ட மரணம், கடுந்துயரத்தை வருவித்தபோதிலும், அந்த கடற்கரை அவர்களின் குருதியால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது -திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

2015ம் ஆண்டு பிப்ரவரியில் லிபியா நாட்டு கடற்கரையில், ஐ.எஸ். இஸ்லாம் தீவிரவாதிகளால், கொடூரமாய்க் கொல்லப்பட்ட, 21 காப்டிக் கிறிஸ்தவர்களும்,  இயேசு கிறிஸ்துவுக்கு பிரமாணிக்கத்துடன் சான்று பகர்ந்தவர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியன்று, எகிப்து நாட்டைச் சேர்ந்த இருபது காப்டிக் கிறிஸ்தவர்களும், கானா நாட்டைச் சேர்ந்த காப்டிக் கிறிஸ்தவர் ஒருவரும், லிபியாவில் கொல்லப்பட்டதன் ஆறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிப்ரவரி 15, இத்திங்கள் மாலையில், எகிப்து காப்டிக் திருஅவைக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார். 

இந்த நாள், அதாவது, 2015ம் ஆண்டின் பிப்ரவரி 15ம் தேதியை, என் இதயத்தில் பதித்து வைத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அந்த 21 பேரும், செம்மறியின் குருதியில், தங்கள் வாழ்வைத் தூய்மையாக்கியவர்கள், மற்றும், பிரமாணிக்கமுள்ள இறைமக்கள் என்று பாராட்டியுள்ளார்.

தண்ணீராலும், தூய ஆவியாராலும் திருமுழுக்குப் பெற்றிருந்த இந்த 21 பேரும் கொல்லப்பட்ட நாளில், இரத்தத்தாலும் திருமுழுக்குப் பெற்றனர் என்றும், அந்த 21 பேரும் நம் புனிதர்கள் என்றும், கிறிஸ்தவ சபைகள், மற்றும், மரபுகள் ஆகிய அனைத்திற்கும் அவர்கள் புனிதர்கள் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

சாதாரண மனிதர்கள், இயேசுவின் சாட்சி

அந்த 21 கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வை, தன் காணொளிச் செய்தியில் பாராட்டிப் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற வெளிநாடுகளுக்குச் சென்ற அந்த 21 பேரும், இயேசு கிறிஸ்துவுக்குச் சான்றுபகர்ந்த சாதாரண கிறிஸ்தவர்கள் என்று கூறியுள்ளார்.

அவர்களின் கழுத்துக்கள், ஐஸ்ஐஸ் தீவிரவாதிகளால், கொடூரமாய் அறுக்கப்பட்டபோது, ஆண்டவராகிய இயேசுவே என, இயேசுவின் பெயரை அறிவித்துக்கொண்டே அவர்கள் உயிர்விட்டனர் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

Sirte கடற்கரையில் அவர்கள் எதிர்கொண்ட மரணம் கடுந்துயரத்தை வருவித்தபோதிலும், அந்த கடற்கரை அவர்களின் குருதியால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களின் எளிமையான மற்றும், உறுதியான நம்பிக்கையால், தங்கள் உயிரைக் கையளிக்கும் அளவுக்கு, இயேசு கிறிஸ்துவுக்குச் சான்றுபகர்ந்து, கிறிஸ்தவர் ஒருவர் பெறக்கூடிய மிகப்பெரும் கொடையைப் பெற்றுள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.  

இந்த 21 காப்டிக் கிறிஸ்தவ மறைசாட்சிகளின் நினைவுநாளில், அவர்கள் நமக்காக கடவுளிடம் பரிந்துரைக்கின்றனர் என நம்புவோம் என்றும், துணிச்சலான இந்த நம் உடன்பிறப்புக்கள் என்ற கொடைக்கு, கடவுளுக்கும், காப்டிக் திருஅவைக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நன்றிகூறுவோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

'நவீன மறைசாட்சிகளின் நாள்'

இலண்டனில் உள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் மறைமாவட்டத்தினால், 'நவீன மறைசாட்சிகளின் நாள்' என்ற பெயரில் நடத்தப்பட்ட மெய்நிகர் கூட்டத்தில் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் முதுபெரும்தந்தை இரண்டாம் Tawadros, கான்டர்பரியின் ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி, கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்கான திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kurt Koch ஆகியோரும் இணையதளம் வழியாகக் கலந்துகொண்டனர்.

காப்டிக் மறைசாட்சிகள் பற்றிய டுவிட்டர் செய்தி

மேலும், பிப்ரவரி 15, இத்திங்கள் மாலையில் திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “21 காப்டிக் கிறிஸ்தவர்களின் நினைவுநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம், இறைத்தந்தையிடம் இவர்கள் நமக்காகப் பரிந்துபேசுவார்களாக” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

16 February 2021, 14:52