திருத்தந்தையால் அருளாளர் என அறிவிக்கப்பட ஒப்புதல் பெற்றுள்ள Armida Barelli திருத்தந்தையால் அருளாளர் என அறிவிக்கப்பட ஒப்புதல் பெற்றுள்ள Armida Barelli 

எட்டு இறையடியார்களின் புண்ணிய வாழ்வு விவரங்கள் ஏற்பு

கர்தினால் மார்செல்லோ செமெராரோ அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்து, 8 இறையடியார்களின் வாழ்வு குறித்த சிறப்பு விவரங்களை சமர்ப்பித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

போர்த்துக்கல், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டு பேரை, அருளாளர் மற்றும், இறையடியார்களாக, அதிகாரப் பூர்வமாக அறிவிப்பதற்கென, புதுமை, மற்றும் அவர்களின் புண்ணிய வாழ்வு குறித்த விவரங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கீகரித்துள்ளார்.

புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள், பிப்ரவரி 20, சனிக்கிழமையன்று திருத்தந்தையைச் சந்தித்து, 8 இறையடியார்களின் வாழ்வு குறித்த சிறப்பு விவரங்களை சமர்ப்பித்தார்.

இத்தாலியின் மிலான் நகரில் 1882ம் ஆண்டு பிறந்து, திருமணமே புரியாமல், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரிடையேப் பணியாற்றி, கிறிஸ்துவின் அரசுரிமை மறைப்பணியாளர்கள் என்ற துறவுவாழ்வு சாரா அமைப்பு ஒன்றை உருவாக்க உதவிய  Armida Barelli அவர்களின் பரிந்துரையால் இடம்பெற்ற புதுமை குறித்த விவரங்கள், திருத்தந்தையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

1952ம் ஆண்டு மரணமடைந்த இவரின் இந்த முதல் புதுமை ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, திருஅவையில் அருளாளராக அறிவிக்கப்பட உள்ள இவர், அடுத்த புதுமைக்குப்பின், புனிதராக அறிவிக்கப்படுவார். அன்று இவரால் ஆரம்பிக்கப்பட்ட மறைப்பணி அமைப்பு, இன்று 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,200 அங்கத்தினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

தற்போது வணக்கத்துக்குரியவர்களாக, தங்கள் புண்ணிய வாழ்வு பண்புகளுக்காக  ஏற்றுக்கொள்ளப்பட்ட 7 இறையடியார்களுள், அருள்பணி புனித பவுலின் இக்னேசியஸ் என்பவர், 1799ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து ஆங்கிலிக்கன் துறவுசபையிலிருந்து கத்தோலிக்க சபைக்கு மனம் மாறி, Passionist துறவு சபையில் அருள்பணியாளராக பணியாற்றியவர்.

1882ம் ஆண்டு போர்த்துக்கல்லில் பிறந்து மறைமாவட்ட அருள்பணியாளராக சிறப்புச் பணியாற்றி 1973ம் ஆண்டு பிரேசில் நாட்டில் உயிரிழந்த இறையடியார் Albino Alves da Cunha Silva, இத்தாலியில் 1752ம் ஆண்டு பிறந்து 1829ம் ஆண்டு உயிரிழந்த, புனித அகுஸ்தினார் துறவு சபையின் அருள்சகோதரி Maria Felicita Fortunata Baseggio, இத்தாலியில் பிறந்து, காங்கோ குடியரசில் 1995ம் ஆண்டு உயிரிழந்த, ஏழைகளின் அருள்சகோதரிகள் துறவுசபையைச் சேர்ந்த அருள்சகோதரிகள் Floralba Rondi, Clarangela Ghilardi, Dinarosa Belleri, இத்தாலியில் 1941ம் ஆண்டு பிறந்து, தெரேசியன் அமைப்பின் அங்கத்தினராகி பணியாற்றி, 1986ம் ஆண்டு உயிரிழந்த, பொதுநிலை விசுவாசியாகிய Elisa Giambelluca ஆகிய இறையடியார்களின் புண்ணிய வாழ்வு பண்புகள் குறித்த விவரங்களும் திருத்தந்தையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2021, 14:38