வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஞாயிறு மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை - கோப்புப் படம் 2020 செப்டம்பர் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஞாயிறு மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை - கோப்புப் படம் 2020 செப்டம்பர் 

மீண்டும் வளாகத்தில் திருத்தந்தையின் மூவேளை செப உரை

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஞாயிறு மூவேளை செப உரையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 7 வருகிற ஞாயிறு முதல் மீண்டும் தொடர்வார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"ஒவ்வொரு மனிதரும், எப்போதும், எல்லா இடங்களிலும் மதிப்புள்ளவர் என்பதை ஏற்றுக்கொள்ள, சமுதாய நட்பும், அனைத்துலக உடன்பிறந்த நிலையம் அவசியம்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 5, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

மேலும், பிப்ரவரி 4, இவ்வியாழனன்று, உலகில் முதல் முறையாக சிறப்பிக்கப்பட்ட மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாளையொட்டி, திருத்தந்தை மெய்நிகர் கூட்டத்தில் வழங்கிய உரையின் ஒரு கூற்றினை, அவர் தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

"இன்று அக்கறையற்றிருப்பதற்கு நேரமில்லை. நாம் அனைவரும் சகோதரர்கள், மற்றும் சகோதரிகளாக வாழவேண்டும், அல்லது, அனைத்தும் குலைந்துவிடும். உடன்பிறந்த நிலை, மனித குலத்தை கட்டியெழுப்பும் அடித்தளம்; நமது நூற்றாண்டின் சவால்" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் பதிவாக வெளியிட்டிருந்தார்.

மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாளையொட்டி நடைபெற்ற இணையவழி மெய்நிகர் கூட்டத்தின் காணொளிப் பதிவைக் காண உதவியாக, http://www.vatican.va/content/francesco/en/events/event.dir.html/content/vaticanevents/en/2021/2/4/giornata-fratellanzaumana.html என்ற இணையத்தள முகவரியை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியுடன் இணைத்திருந்தார்.

இதற்கிடையே, கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, கடந்த இரு மாதங்களாக வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஞாயிறு மூவேளை செப உரையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 7 வருகிற ஞாயிறு முதல் மீண்டும் தொடர்வார் என்று, வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.

2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வத்திக்கான் நூலக அறையிலிருந்து தன் புதன் மறைக்கல்வி உரைகளையும், மூவேளை செப உரைகளையும் வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இடையில் ஒருசில ஞாயிறுகளில் புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரைகளை வழங்கி வந்தார்.

டிசம்பர் 20ம் தேதி ஞாயிறுவரை, புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரைகளை வழங்கிவந்த திருத்தந்தை, பெருந்தொற்றின் தாக்கம் மீண்டும் எழுந்ததையொட்டி, தன் மூவேளை செப உரைகளை மீண்டும் நூலகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கி வந்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2021, 15:41