கராச்சி உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர், பென்னி மாரியோ ட்ரவாஸ் கராச்சி உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர், பென்னி மாரியோ ட்ரவாஸ்  

கராச்சி உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர்

முல்தான் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வந்த பென்னி மாரியோ ட்ரவாஸ் அவர்களை, கராச்சி உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயராக திருத்தந்தை நியமித்துள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிவந்த கர்தினால் ஜோசப் கூட்ஸ் (Joseph Coutts) அவர்கள் பணிஓய்வு பெற விழைந்து அனுப்பிய விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 11, இவ்வியாழனன்று ஏற்றுக்கொண்டார்.

இதுவரை, அந்நாட்டில், முல்தான் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வந்த பென்னி மாரியோ ட்ரவாஸ் (Benny Mario Travas) அவர்களை, கராச்சி உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயராக திருத்தந்தை நியமித்துள்ளார்.

கர்தினால் ஜோசப் கூட்ஸ்

ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியாவின், அமிர்தசரஸில் 1945ம் ஆண்டு பிறந்த ஜோசப் கூட்ஸ் அவர்கள், 1971ம் ஆண்டு பாகிஸ்தான் இலாகூர் மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

உரோம் நகரில் மூன்றாண்டுகள் கல்வி பயின்ற கூட்ஸ் அவர்கள், கராச்சியில், அருள்பணியாளர்களை உருவாக்கும் கல்லூரியில், மெய்யியல் பேராசிரியராக, தன் பணியைத் துவக்கி, பின்னர் கராச்சி, இலாகூர் மறைமாவட்டங்களில், பல்வேறு பொறுப்புக்களில் பணியாற்றினார்.

1988ம் ஆண்டு, பாகிஸ்தான் ஹைதராபாத் மறைமாவட்டத்தின் வாரிசு ஆயராக, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் நியமனம் பெற்ற கூட்ஸ் அவர்கள், 1990ம் ஆண்டு அம்மறைமாவட்டத்தின் ஆயராகவும், 1998ம் ஆண்டு, ஃபைசலாபாத் ஆயராகவும் பொறுப்புக்களை ஏற்றார்.

2012ம் ஆண்டு, கராச்சி உயர் மறைமாவட்டத்தின் பேராயராக, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் நியமிக்கப்பட்ட கூட்ஸ் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ம் ஆண்டு, கர்தினாலாக உயர்த்தினார்.

'நல்லிணக்கம்' (Harmony) என்பதை, தன் பணிவாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்த கர்தினால் கூட்ஸ் அவர்கள், பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய வேளையில், 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்துள்ளார்.

புதிய பேராயர் பென்னி மாரியோ ட்ரவாஸ்

கராச்சி உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயராக நியமனம் பெற்றுள்ள ஆயர் பென்னி மாரியோ ட்ரவாஸ் அவர்கள், 1966ம் ஆண்டு, கராச்சியில் பிறந்து, பின்னர், கராச்சி உயர் மறைமாவட்ட அருள்பணியாளராக 1990ம் ஆண்டு அருள்பொழிவு பெற்றார்.

உரோம் நகரின் உர்பானியா பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டங்களில் முதுகலை பட்டம் பெற்று, 1997ம் ஆண்டு நாடு திரும்பிய அவர், அருள்பணியாளர்களின் உருவாக்கம், மற்றும், மறைமாவட்ட நிர்வாகம் ஆகிய பணிகளில் ஈடுபட்டார்.

ஆயர் ட்ரவாஸ் அவர்கள், பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் தலைவராகவும், திருவழிபாடு, மற்றும் அருளடையாள நெறிமுறை திருப்பீடப் பேராயத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

2014ம் ஆண்டு அருள்பணி ட்ரவாஸ் அவர்களை, முல்தான் மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரை, இவ்வியாழனன்று, கராச்சி உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமித்துள்ளார்.

அத்துடன், குவைத் மற்றும் கத்தார் நாடுகளில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிவந்த பேராயர் Domnach Sechnaill அவர்களை, பக்ரேயின் திருப்பீடத் தூதராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 11, இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2021, 14:25