தேடுதல்

Fratelli Tutti திருமடலில் கையெழுத்திடும் திருத்தந்தை பிரான்சிஸ் Fratelli Tutti திருமடலில் கையெழுத்திடும் திருத்தந்தை பிரான்சிஸ் 

"பெர்கோலியோ அகராதி: தலைமைப்பணியின் முக்கிய சொற்கள்"

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்தி வரும் சொற்கள், சாதாரண, எளிய வாழ்விலிருந்து எடுக்கப்படும் சொற்களாக இருப்பதால், அவை, கத்தோலிக்கத் திருஅவை என்ற எல்லையைத் தாண்டி, மத நம்பிக்கை அற்றவர்களையும் சென்றடைந்துள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்தும் சொற்கள், உலக எதார்த்தத்தை வெளிக்கொணரும் அதே வேளையில், அவற்றை, சரிவர புரிந்துகொள்ள இயலாமல் போகும் வாய்ப்பும் உண்டு என்று, மெய்யியல் மற்றும் மானிட இயலைச் சொல்லித்தரும் இஸ்பானிய பேராசிரியர் Francesc Torralba அவர்கள் கூறினார்.

பார்சலோனாவின் Ramòn Llull பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியாற்றும் Torralba அவர்கள், "பெர்கோலியோ அகராதி: தலைமைப்பணியின் முக்கிய சொற்கள்" என்ற தலைப்பில், பிப்ரவரி 18 இவ்வியாழன் மாலையில், இணையத்தளம் வழியே வெளியிட்ட நூலைக் குறித்து வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

தன் தலைமைப்பணிக் காலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்தியுள்ள பல சொற்களை, அவர், புயனஸ் அயிரஸ் நகரில் அருள் பணியாளராகப் பணியாற்றிய காலம் முதல் பயன்படுத்தி வந்துள்ளார் என்று, Torralba அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்தி வரும் சொற்கள், சாதாரண, எளிய வாழ்விலிருந்து எடுக்கப்படும் சொற்களாக இருப்பதால், அவை, கத்தோலிக்கத் திருஅவை என்ற எல்லையைத் தாண்டி, மத நம்பிக்கை அற்றவர்களையும் சென்றடைந்துள்ளன என்று பேராசிரியர் Torralba அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பயன்படுத்தும் பல சொற்களை, வெறும் சொற்களாக மட்டும் பிரித்து காணாமல், அவர் பயன்படுத்தியுள்ள சைகைகள், உடல் மொழி இவற்றுடன் காணவேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது, அதற்கு விடையளித்த பேராசிரியர் Torralba அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாயமொழியாகச் சொல்லும் வார்த்தைகளைவிட, அவர் தன் உடலால், சைகைகளால், முக பாவனைகளால் சொல்லும் சொற்கள் கூடுதலாக உள்ளன என்பதையும் ஏற்றுக்கொண்டார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல், மற்றும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகியோர் காலத்தில் பயன்படுத்தாத சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்தியுள்ளார் என்பதை தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்ட நூலின் ஆசிரியர் Torralba அவர்கள், எடுத்துக்காட்டாக, ஆன்மீக மறதி என்ற குறைபாட்டைச் சுட்டிக்காட்ட, அவர் பயன்படுத்தியுள்ள Spiritual Alzheimer's என்ற பதத்தை குறிப்பிட்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்தி வரும் சொற்களில் பேராசியர் Torralba அவர்களை அதிகம் கவர்ந்த சொற்கள் அல்லது கருத்து என்ன என்ற கேள்வி எழுந்தபோது, தனி மனிதர்களும், திருஅவையும் தன்னைவிட்டு வெளியேற வேண்டிய அவசியத்தைக் குறித்து திருத்தந்தை பேசி வருவது, தன்னை அதிகம் கவர்ந்த ஒரு கருத்து என்று கூறினார்.

இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான சவால்களை முன்வைக்கும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள Laudato si திருமடல், சுற்றுச்சூழலை மையப்படுத்திய ஒரு மனமாற்றத்திற்கு நம்மை அழைக்கிறது என்பதை, தன் பேட்டியின் இறுதியில், பேராசிரியரும், "பெர்கோலியோ அகராதி" என்ற நூலின் ஆசிரியருமான Torralba அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2021, 14:31