பேராசிரியர் Vincenzo Buonomo (கோப்புப்படம் 08-09-2016) பேராசிரியர் Vincenzo Buonomo (கோப்புப்படம் 08-09-2016) 

இயேசு, நம் மீட்பர் என்ற நற்செய்தியை பறைசாற்றவேண்டும்

திருப்பீட தலைமையகத்தின் நெறிமுறை ஆணையத்தின் தலைவராக, முதன்முறையாக, பொதுநிலையினர் ஒருவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்மஸ் காலத்தில் நாம் பார்த்த, மற்றும், கேட்ட நற்செய்திகளை உலகறியச் செய்யவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 09, இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தி வழியாக, அழைப்பு விடுத்துள்ளார்.

“கிறிஸ்மஸ் காலம் கடந்துகொண்டிருக்கிறது. ஆயினும், நாம், குடும்ப வாழ்வுக்கு, பணிக்கு மற்றும், மனமாற்றத்திற்குத் திரும்பவேண்டும், இக்காலக்கட்டத்தில் நாம் கேட்டவை மற்றும், பார்த்தவைகளுக்காக கடவுளை மகிமைப்படுத்தவேண்டும், மற்றும், அவரைப் புகழவேண்டும். இயேசு, நம் மீட்பர் என்ற நற்செய்தியை உலகிற்குக் கொணரவேண்டும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று பதிவாகியிருந்தன.

பணி நியமன சான்றிதழ்கள்

மேலும், சனவரி 08, இச்சனிக்கிழமையன்று, உருகுவாய் நாட்டு திருப்பீடத் தூதர் Guzmán Miguel Carriquiry Lecour அவர்களும், மொந்தெநெக்ரோ நாட்டு திருப்பீட தூதர் Miodrag Vlahović அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் தனித்தனியே சந்தித்து, தங்களின் பணி நியமன சான்றிதழ்களைச் சமர்ப்பித்தனர்.

திருப்பீட தலைமையகத்தின் நெறிமுறை ஆணையம்

இன்னும், திருப்பீட தலைமையகத்தின் அறநெறி ஆணையத்தின் தலைவராக, முதன்முறையாக, பொதுநிலையினர் ஒருவரை, சனவரி 08, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் மாநகரில் அமைந்துள்ள இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் இயக்குனராக, 2018ம் ஆண்டிலிருந்து பணியாற்றிவந்த, 59 வயது நிறைந்த திருவாளர் Vincenzo Buonomo அவர்களை, திருப்பீட தலைமையகத்தின் அறநெறி ஆணையத்தின் தலைவராக, திருத்தந்தை நியமித்துள்ளார். பன்னாட்டு சட்டயியல் பேராசிரியரான இவர், 1980களிலிருந்து, திருப்பீடத்தில் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

1981ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திருப்பீட தலைமையகத்தின் அறநெறி ஆணையம், திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றுவோரின் அறநெறி வாழ்வுக்குப் பொறுப்பு வகிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2021, 14:11