ரோமன் ரோட்டா  பணியாளர்கள் ரோமன் ரோட்டா பணியாளர்கள் 

குடும்பத்தின் ஒருங்கிணைந்த நலனைப் பாதுகாக்க

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயுள்ள ஒன்றிப்பின் அடிப்படைக் கூறுகளில், பிள்ளைகளின் பிறப்பு, அவர்களின் வளர்ப்பு ஆகியவையும் உள்ளடங்கியுள்ளன - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ரோமன் ரோட்டா எனப்படும், திருமணம் சார்ந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான,  திருஅவையின் உச்ச நீதிமன்றம், நீதி ஆண்டைத் தொடங்குவதையொட்டி, அந்த நீதிமன்றத்தின் தலைவரான பேரருள்திரு Pio Vito Pinto அவர்களை, சனவரி 29, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் தனியே சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அதன்பின்னர், வத்திக்கானில், ரோமன் ரோட்டாவின் பணியாளர்கள் அனைவருக்கும் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளால் வழங்கப்பட்ட பிள்ளைகளோடு உள்ள தம்பதியரே, நாம் அழைக்கும் உண்மையான குடும்பம் என்று கூறினார்.

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயுள்ள ஒன்றிப்பின் அடிப்படைக் கூறுகளில், பிள்ளைகளின் பிறப்பு, பிள்ளைகளைக் கொடையாக நோக்குதல், மற்றும், அவர்களின் வளர்ப்பு ஆகியவையும் உள்ளடங்கியுள்ளன என்று திருத்தந்தை கூறினார்.

திருமண முறிவுக்காக விண்ணப்பித்திருக்கும் தம்பதியரின் நிலைபற்றியும், அந்தத் தம்பதியரின் பிள்ளைகள் நிலைபற்றியும், அவர்கள் திருநற்கருணை விருந்தில் பங்குகொள்வதற்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை,   வருகிற மார்ச் மாதம் 19ம் தேதியன்று, "அன்பின் மகிழ்வு குடும்பம் (Amoris laetitia Family)" என்ற ஆண்டு திருஅவையில் தொடங்கப்படுவது பற்றியும் குறிப்பிட்டார்.

இந்த "அன்பின் மகிழ்வு குடும்பம்" என்ற ஆண்டில், குடும்பங்களோடு, குடும்பத்திற்காக, திருஅவை மேற்கொள்ளும் பயணத்தில், ரோமன் ரோட்டா உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றுவோர், தங்கள் பணிகள் வழியாக, சிறந்த பங்களிப்பை அளிக்குமாறு, திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

திருமண முறிவு குறித்த தீர்மானத்தில் எதிர்கொள்ளப்படும் கடும் விளைவுகளையும், மனிதரின் ஒருங்கிணைந்த நலனையும் கருத்தில்கொள்ளும் திருஅவையின் மேய்ப்புப்பணி உணர்வுகளுக்குச் சாட்சி பகர்வதாக, திருமண முறிவுக்கு நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பு இருக்கவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

ஓர் அன்னையாக இருக்கின்ற திருஅவையின் மேய்ப்புப்பணியில், நீதிபதிகளின் பணி முக்கியமானது என்றும், குடும்பம், மற்றும், கிறிஸ்தவ திருமணம் ஆகியவற்றிக்கு, கவனமும் அக்கறையும் காட்டுவதில் நாம் மனந்தளரக் கூடாது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீதிபதிகளின் ஒவ்வொரு தீர்ப்பிலும் செயல்படும் தூய ஆவியார், பிள்ளைகளின் நலன், அவர்களின் மனஅமைதி மற்றும், திருமண முறிவால் ஏற்படும் மகிழ்வின்மை ஆகியவற்றை தீர்ப்பின்போது மறக்காமல் இருப்பதற்கு உதவுவாராக என்றும் கூறினார்.

மறைமாவட்ட ஆயர்கள், அவர்களோடு பணியாற்றுவோர் அனைவரும், திருமண முறிவு குறித்து தீர்ப்பு வழங்கும்போது, திருமண முறிவுக்குப்பின், தம்பதியரும், பிள்ளைகளும் எதிர்கொள்ளும் துன்பங்களை நினைவில் இருத்துமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2021, 15:28