உரோம் புனித பேதுரு வளாகம் அருகே வீடற்ற ஒருவர் உரோம் புனித பேதுரு வளாகம் அருகே வீடற்ற ஒருவர் 

கவனிப்பார் யாருமின்றி, கடுங்குளிரில் உயிரிழந்த நைஜீரிய அகதி

கவனிப்பார் யாருமின்றி அனாதையாக எட்வின் என்பவர் உயிரிழந்துள்ளது, அண்மைக் காலங்களில், உரோம் நகரில், வீடற்றோர் பலர் உயிரிழந்ததை மீண்டும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நைஜீரியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த ஒருவர், உரோம் நகரில், மற்றவர்களால் கைவிடப்பட்டு, ஜனவரி 20ம் தேதி, புதன் அதிகாலையில், கடுங்குளிர் காரணமாக உயிரிழந்துள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 24, இஞ்ஞாயிற்றுக்கிழமை தன் நூலக அறையிலிருந்து நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த உரையின் இறுதியில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வீடற்ற மனிதர், 46 வயது எட்வின் என்பவர், கவனிப்பாரின்றி, கடுங்குளிரில், புனித பேதுரு வளாகம் அருகே உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டதுடன், எட்வினுக்காக செபிக்குமாறு அழைப்பு விடுத்து, தானும் சில நிமிடம் மௌனமாக செபித்தார்.

நைஜீரியாவிலிருந்து புலம்பெயர்ந்து, கவனிப்பார் யாருமின்றி அனாதையாக விடப்பட்ட எட்வின் அவர்கள் உயிரிழந்துள்ளது, அண்மைக் காலங்களில் உரோம் நகரில் வீடற்றோர் பலர் உயிரிழந்ததை மீண்டும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது என உரைத்த திருத்தந்தை, இறந்து போன எட்வின் நம் ஒவ்வொருவராலும் கைவிடப்பட்டவர் என கூறினார்.

திருத்தந்தை புனித பெரிய கிரகரியின் காலத்தில், இதேபோல், இரந்துண்பவர் ஒருவர் குளிரால் இறந்ததைக் காண நேர்ந்தபோது, அந்நாளை புனித வெள்ளிபோல் நடத்த நினைத்து, அன்று உரோம் நகர் கோவில்களில் திருப்பலி நிறைவேற்ற அத்திருத்தந்தை தடை விதித்ததையும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் நினைவூட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2021, 12:50