திருத்தந்தையுடன், உலக உணவுத் திட்டம் (WFP) அமைப்பின் தலைவர், டேவிட் பீஸ்லி திருத்தந்தையுடன், உலக உணவுத் திட்டம் (WFP) அமைப்பின் தலைவர், டேவிட் பீஸ்லி 

திருத்தந்தையுடன் உலக உணவுத் திட்டம் அமைப்பின் தலைவர்

"திருநூல்களில் காணப்படும் வார்த்தைகள், பப்பிரஸ், ஏட்டுச்சுருள்கள் ஆகியவற்றில் தங்கியிருக்கும்வண்ணம் உருவாக்கப்படவில்லை" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 24, கடந்த ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட 'இறைவார்த்தை ஞாயிறை'யும், அண்மைய வாரங்களில், தான் வழங்கிவரும் புதன் மறைக்கல்வி உரைகளின் மையக்கருத்தான 'இறைவேண்டலை'யும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 28, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"திருநூல்களில் காணப்படும் வார்த்தைகள், பப்பிரஸ், ஏட்டுச்சுருள்கள் ஆகியவற்றில் தங்கியிருக்கும்வண்ணம் உருவாக்கப்படவில்லை, மாறாக, அவ்வார்த்தைகளை தியானித்து, இறைவேண்டல் செய்வோரின் உள்ளங்களை அவை மலரச்செய்கின்றன" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

சனவரி 28, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3,037 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், ஐ.நா. நிறுவனத்தின் ஓர் அங்கமாக விளங்கும் உலக உணவுத் திட்டம் (World Food Programme) என்ற அமைப்பின் தலைவர், டேவிட் பீஸ்லி (David Beasley) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சனவரி 28, இவ்வியாழனன்று, வத்திக்கானில் சந்தித்து பேசினார்.

2020ம் ஆண்டு, வழங்கப்பட்ட உலக அமைதி நொபெல் விருதினை, உலக உணவு திட்டம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உரோம் நகரை தலைமையகமாகக் கொண்டு செயலாற்றும் சான் எஜிதியோ (Sant’Egidio) என்ற பிறரன்பு அமைப்பின் நிறுவனரான பேராசிரியர் அந்திரேயா ரிக்கார்தி (Andrea Riccardi) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் நிறைவுற்ற 1968ம் ஆண்டு, அந்திரேயா ரிக்கார்தி அவர்களால், உரோம் நகரில் உள்ள ஒரு பள்ளியில் துவங்கப்பட்ட சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு, இறைவேண்டல், வறியோர், அமைதி என்ற மூன்று விருது வாக்குகளைக் கொண்டு, உலகின் 70 நாடுகளில், சமுதாயத்தின் விளிம்பில் வாழும் மக்களுக்கு பணிகள் செய்து வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2021, 15:01