இத்தாலிய தொலைக்காட்சிக்கு திருத்தந்தை வழங்கிய நேர்முகம் இத்தாலிய தொலைக்காட்சிக்கு திருத்தந்தை வழங்கிய நேர்முகம் 

அக்கறையின்மை, நம்மை மற்றவர்களிடமிருந்து தூரமாக்குகின்றது

இன்றைய கொள்ளை நோய், வாழ்வின் பாதுகாப்பு, அரசியலிலும், திருஅவையிலும் ஒன்றிப்பின் மதிப்பீடுகள், தடுப்பூசி, விசுவாசம், என பல்வேறு தலைப்புகள் குறித்து திருத்தந்தையின் நேர்முகம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்றைய நெருக்கடிகளை வெற்றிகொள்ள இவ்வுலகிற்கு ஒன்றிப்பும், உடன்பிறந்த உணர்வும் தேவைப்படுகின்றது என்று, தொலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய கொள்ளைநோய், வாழ்வின் பாதுகாப்பு, அரசியலிலும், திருஅவையிலும் ஒன்றிப்பின் மதிப்பீடுகள், தடுப்பூசி, விசுவாசம், என பல்வேறு தலைப்புகள் குறித்து, இத்தாலியின் Tg5  என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொள்ளைநோயால் உருவாகியுள்ள நெருக்கடி நிலைகளைக் களைய, ஒன்றிப்பின் தேவை குறித்து வலியுறுத்தினார்.

நம் வாழ்வில் ஒவ்வொருவரும் மதிப்பீடுகளைத் தாங்கியிருந்தாலும், அவை அனைத்தும் அந்தந்த சூழல்களில் உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, இன்றைய கொள்ளைநோய் நெருக்கடியிலிருந்து நாம் வெளியேற முடிந்தாலும், ஏழைக்குழந்தைகளுக்குத் தேவையான தீர்வுகளையும், போர்களை நிறுத்தும் தீர்வுகளையும் காணமுடியவில்லையெனில், அதை நாம் வெற்றியாக கருதமுடியாது என்று கூறினார்.

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வது, தன்னைக் காப்பதற்காக மட்டுமல்ல, பிறருக்கும் இந்நோயை பரப்பாமல் இருக்க உதவும் என்று கூறியத் திருத்தந்தை, தானும் இந்த தடுப்பூசியை போட  உள்ளதாக இப்பேட்டியில் தெரிவித்தார்.

மற்றவர் குறித்த அக்கறையின்மை, நம்மை மற்றவர்களிடமிருந்து தூரப்படுத்துகின்றது, என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்திலும், திருஅவையிலும் ஒன்றிப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது என்பதையும் எடுத்துரைத்தார்.

கருக்கலைத்தல் குறித்தும் இந்த தொலைக்காட்சி பேட்டியில் தன் கருத்துக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருக்கலைத்தல் என்பது, முதலில், ஒரு சமுதாயப் பிரச்சனை, அதன் பின்னரே, அது மதப்பிரச்சனையாகியது எனக் கூறியதுடன், ஒரு பிரச்சனைக்குத் தீர்வுகாண,  கொலையாளியின் உதவியை நாடுவது முறையா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையகமான Capitolல் இடம்பெற்ற வன்முறை நிகழ்வுகள் குறித்தும் இப்பேட்டியில் கவலையை வெளியிட்ட திருத்தந்தை, ஒழுங்கமைவையும், குடியாட்சியின் முதிர்ச்சியையும் கொண்டுள்ள ஒரு நாட்டில், இத்தகைய வன்முறை நிகழ்வுகள் இடம்பெற்றது குறித்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு, வன்முறைகளை முற்றிலுமாக கைவிடவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

தான் மக்களை நேரடியாக சந்திக்க முடியாமல் இருப்பது, இக்காலக்கட்டத்தில் அதிக நேரத்தை செபத்தில் செலவிடுவது, ஈராக் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் நம்பிக்கையுடன் வாழ்வது, போன்றவைகளையும் தன் பேட்டியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரின் விசுவாசம், மற்றும், இறைவனின் நெருக்கம் என்பவை குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2021, 13:11