அரசுத்தலைவர் ஜோ பைடன் பதவிப் பிரமாணம் சேய்தல் அரசுத்தலைவர் ஜோ பைடன் பதவிப் பிரமாணம் சேய்தல் 

அரசுத்தலைவர் ஜோசப் பைடனுக்கு திருத்தந்தையின் வாழ்த்து

உன்னத அரசியல், நன்னெறி, மற்றும் மத விழுமியங்களிலிருந்து அமெரிக்க மக்கள் தங்கள் சக்தியை, அரசுத்தலைவர் ஜோசப் பைடன் அவர்களின் தலைமைத்துவத்திற்குக் கீழ் பெறுவார்களாக - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 20, இப்புதனன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் 46வது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திருவாளர் ஜோசப் பைடன் அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், தன் வாழ்த்துக்களையும், இறைவேண்டல்களையும் வழங்கியுள்ளார்.

"அமெரிக்க ஐக்கிய நாட்டின் 46வது அரசுத்தலைவராக பணியைத் துவங்கியுள்ள உங்களுக்கு, என் மனமார்ந்த நல் வாழ்த்துக்களையும், இறைவேண்டலின் உறுதியையும் உரித்தாக்குகிறேன், மேலும், இந்த உயர்ந்த பொறுப்பை நிறைவேற்றத் தேவையான சக்தியையும், ஞானத்தையும் இறைவன் உங்களுக்கு வழங்குவாராக" என்ற சொற்களுடன், திருத்தந்தை, தன் வாழ்த்துச் செய்தியை துவக்கியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாடு நிறுவப்பட்ட வேளையில், அதை வழிநடத்திய உன்னத அரசியல், நன்னெறி, மற்றும் மத விழுமியங்களிலிருந்து அமெரிக்க மக்கள் தங்கள் சக்தியை, அரசுத்தலைவர் பைடன் அவர்களின் தலைமைத்துவத்திற்குக் கீழ் பெறுவார்களாக என்ற வாழ்த்துக்களையும் திருத்தந்தை வழங்கியுள்ளார்.

இன்று மனித சமுதாயம் சந்தித்துவரும் பெரும் நெருக்கடி நேரம், தொலைநோக்கும், ஒருங்கிணைப்பும் கொண்ட ஒரு பதிலிறுப்பை எதிர்பார்க்கிறது என்பதை, தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பைடன் அவர்கள் எடுக்கும் முடிவுகள், நீதியையும், விடுதலையையும் கொண்டுள்ள சமுதாயத்தை உருவாக்கும் முடிவுகளாக இருக்க, தன் இறைவேண்டலை வழங்குவதாகக் கூறியுள்ளார்.

பைடன் அவர்களின் தலைமைப்பணி காலத்தில் மக்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக, வறியோரும், மற்றும் குரல் எழுப்ப இயலாதோரும், தங்கள் உரிமைகளையும், மாண்பையும் கண்டுகொள்ளவேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் விருப்பமாக வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், இன்னும், உலகின் அனைத்து நாடுகளிலும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல், ஒப்புரவு, அமைதி ஆகிய பண்புகள் வளர்வதற்கு, அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும், அனைத்து ஞானத்திற்கும், உண்மைக்கும் ஊற்றான இறைவன் வழிநடத்த வேண்டும் என்று, தான் இறைவேண்டல் செய்வதாகக் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2021, 14:50