இயேசுவில் ஒன்றிருத்திருந்தால் மட்டுமே கனிதர இயலும்

நாம் ஒருவர் ஒருவரை அனபுகூர்வதற்கு இறைவேண்டல் இன்றியமையாதது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சனவரி 25, இத்திங்கள் மாலையில், உரோம் மாநகரில் அமைந்துள்ள புனித பவுல் பெருங்கோவிலில் நடைபெற்ற, 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு திருவழிபாட்டில் வழங்கப்பட்ட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைச் சிந்தனைகள், “என்னில் நிலைத்திருத்திருங்கள்” என்ற இயேசுவின் அழைப்பை மையப்படுத்தி அமைந்திருந்தன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடல்நலக் குறைவால், இத்திருவழிபாட்டை நிறைவேற்ற முடியாத சூழலில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் அவர்கள், இத்திருவழிபாட்டை நிறைவேற்றி, திருத்தந்தை, இந்நிகழ்வுக்கென ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த மறையுரையை வாசித்தார்.

இந்த மாலை திருவழிபாட்டில் பங்குபெற்ற, பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, கிறிஸ்தவ சபைகளிடையே ஒன்றிப்பு நிலவுவதற்குத் தேவையான மூன்று நிலைகள் பற்றி எடுத்துரைத்துள்ளார்.

ஒன்றிப்பின் மூன்று நிலைகள்

கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே மிக அத்தியாவசியமான ஒன்றிப்பு நிலவுவதற்குரிய மூன்று நிலைகளும், ஒரு மரத்தின் அடிப்பாகத்தைச் சுற்றியிருக்கும் மூன்று வளையங்கள் போன்றவை என்றுரைத்துள்ள திருத்தந்தை, இந்த ஒன்றிப்பு, முதலில் இயேசுவில் நிலைத்திருப்பதிலிருந்து தொடங்குகின்றது என்றும், நிலைத்திருப்பது என்பது, அவரது அன்பை அனுபவிக்கும் இறைவேண்டலிலிருந்து ஆரம்பிக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

இரண்டாவது நிலை, கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் ஒன்றிப்பு என்று கூறி, அதனை விளக்கியுள்ள திருத்தந்தை, நாம் எல்லாரும் ஒரே திராட்சைச் செடியின் கிளைகள் என்றும், ஒருவர் ஆற்றும் செயல், அடுத்தவரைப் பாதிக்கின்றது என்றும், நாம் ஒருவர் ஒருவரை அனபுகூர்வதற்கும் இறைவேண்டலே இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார்.

ஒருவர் ஒருவரை அன்புகூர்தல் என்பது, எளிதானதல்ல எனினும், இதனாலேயே, முழு ஒன்றிப்பை நோக்கிய பயணத்திற்குத் தடைகளாய் அமைந்துள்ள, அடுத்தவர் மீதுள்ள முற்சார்பு எண்ணங்களையும், உலகப்பற்றுக்களையும் நம்மிடமிருந்து தறித்துவிடுவதற்கு, நாம் கடவுளிடம் மன்றாடவேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

மூன்றாவது நிலை, அனைத்து மனித சமுதாயத்தோடும் ஒன்றிப்பு என்று சொல்லி, அது பற்றியும் தன் சிந்தனைகளை எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளதுபோன்று, நம்மை அன்புகூர்பவர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் அன்புகூர, தூய ஆவியார் உதவுவார் என்றும், நல்ல சமாரியர் போன்று, அனைவருக்கும் அயலவர்களாக இருக்கவும், நம் அன்புக்குப் பதிலன்பு காட்டாதவர்களையும்கூட அன்புகூரவும் நாம் அழைப்புப்பெற்றுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.  

செயலில் அன்பு

கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மற்றவருக்குப் பணியாற்றுவது, நாம் எல்லாரும் சகோதரர், சகோதரிகள் என்ற உணர்வை மீண்டும் உணரவைக்கும், மற்றும், ஒன்றிப்பில் வளர அது உதவும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிக்கவும், நாம் வாழும் முறையைத் துணிவோடு தெரிவுசெய்யவும், தூய ஆவியார் நம்மைத் தூண்டுவார் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2021, 15:10