பெத்லகேம் கிறிஸ்து பிறப்பு ஆலயத்தில் கீழை வழிபாட்டு முறை கிறிஸ்மஸ் பெருவிழா வழிபாடு பெத்லகேம் கிறிஸ்து பிறப்பு ஆலயத்தில் கீழை வழிபாட்டு முறை கிறிஸ்மஸ் பெருவிழா வழிபாடு 

கீழை வழிபாட்டு முறையினருக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து

சனவரி 7, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைச் சிறப்பிக்கும் கீழை வழிபாட்டு முறை கத்தோலிக்கர், கிறிஸ்தவர்கள், மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும், திருத்தந்தை தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 7, இவ்வியாழனன்று, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைச் சிறப்பிக்கும் கீழை வழிபாட்டு முறை கத்தோலிக்கர், கிறிஸ்தவர்கள், மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கீழை வழிபாட்டு முறையினருக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

சனவரி 6, இப்புதனன்று, வத்திக்கானில், திருக்காட்சிப் பெருவிழா சிறப்பிக்கப்பட்ட வேளையில், வத்திக்கான் நூலகத்திலிருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, அந்த உரையின் இறுதியில், கீழை வழிபாட்டு முறையைப் பின்பற்றுவோர் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை வெளியிட்டார்.

நமது அமைதியும், நம்பிக்கையாக விளங்கும் கிறிஸ்துவின் ஒளியில், கொண்டாடப்படும் புனித கிறிஸ்மஸ் விழாவுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்களைக் கூறுகிறேன் என்ற சொற்களுடன் திருத்தந்தை தன் வாழ்த்துக்களை வெளியிட்டார்.

கிரகோரியன் நாள்காட்டியினைப் பின்பற்றும், கத்தோலிக்கர், மற்றும், கிறிஸ்தவர்கள், டிசம்பர் 25ம் தேதியை கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவாகக் கொண்டாடுவதுபோல், ஜூலியன் நாள்காட்டியினைப் பின்பற்றும், கீழை வழிபாட்டு முறை கத்தோலிக்கர், கிறிஸ்தவர்கள், மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சேர்ந்தவர்கள் அனைவரும், சனவரி 7ம் தேதியை, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவாகக் கொண்டாடிவருகின்றனர்.

மூவேந்தர்கள் ஊர்வலம் – திருத்தந்தையின் பாராட்டு

மேலும், போலந்து நாட்டில், மூன்று அரசர்களின் வருகையைச் சிறப்பிக்கும் வண்ணம் பல நகரங்களில் நடைபெற்ற ஊர்வலங்களில் கலந்துகொண்டோரை, சனவரி 6 இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் பாராட்டினார்.

குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலும், அவர்களுக்கு, மூவேந்தர்கள் அல்லது மூன்று ஞானிகளைக் குறித்த புரிதலை உருவாக்கும் வகையிலும் நடைபெறும் இத்தகைய ஊர்வலங்கள், நற்செய்தியைப் பறைசாற்றும் நிகழ்வுகள் என்று திருத்தந்தை பாராட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2021, 15:07