தேடுதல்

Vatican News
Fabrizio Soccorsi அவர்களின் அடக்கத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் Fabrizio Soccorsi அவர்களின் அடக்கத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

தனிப்பட்ட மருத்துவரின் அடக்கத் திருப்பலியில் திருத்தந்தை

வத்திக்கான் நகர நலப்பணி துறையிலும், புனிதர் நிலைக்கு உயர்த்தும் பேராயத்திலும் ஆலோசகராகப் பணியாற்றிவந்த மருத்துவர் Soccorsi அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தனிப்பட்ட மருத்துவராகத் தெரிவு செய்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட மருத்துவர், Fabrizio Soccorsi அவர்களின் அடக்கத் திருப்பலி, சனவரி 26ம் தேதி பிற்பகல் வத்திக்கானில் நிகழ்ந்த வேளையில், அத்திருப்பலியில், திருத்தந்தை கலந்துகொண்டார் என்று, வத்திக்கான் செய்தித்துறை தலைவர், மத்தேயோ புரூனி (Matteo Bruni) அவர்கள் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

வத்திக்கானில் அமைந்துள்ள குடும்பத்தின் அரசியாம் புனித மரியா ஆலயத்தில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தலைமையேற்று நடத்திய இத்திருப்பலியில், திருத்தந்தை கலந்துகொண்டார்.

78 வயது நிறைந்த மருத்துவர் Soccorsi அவர்கள், புற்றுநோய் தொடர்பான பிரச்சனைகளை முன்னிட்டு, டிசம்பர் 26ம் தேதி உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு கோவிட்-19 தொடர்பான சுவாசப் பிரச்சனைகள் உருவாகி, சனவரி 9ம் தேதி மரணமடைந்தார்.

1942ம் ஆண்டு, உரோம் நகரில் பிறந்த Fabrizio அவர்கள், 1968ம் ஆண்டு, தன் 26வது வயதில், மருத்துவப் படிப்பை நிறைவு செய்து, மருத்துவ மனைகளிலும், மருத்துவக்கல்வித் துறையிலும் தன் பணிகளைத் தொடர்ந்துவந்தார்.

வத்திக்கான் நகர நலப்பணி துறையிலும், புனிதர் நிலைக்கு உயர்த்தும் பேராயத்திலும் ஆலோசகராகப் பணியாற்றிவந்த மருத்துவர் Soccorsi அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு, தன் தனிப்பட்ட மருத்துவராகத் தெரிவு செய்தார்.

27 January 2021, 14:15