சனவரி 1 புத்தாண்டு நாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை சனவரி 1 புத்தாண்டு நாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை 

புத்தாண்டு நாள் – திருத்தந்தையின் மூவேளை செப உரை

இறைவனின் தாயாக இன்று நாம் கொண்டாடும் மிகவும் புனிதம் நிறைந்த மரியாவின் தாய்மையும், பரிவும் நிறைந்த பார்வைக்குக் கீழ் நம்மையே ஒப்படைத்து இந்த ஆண்டை துவக்குகிறோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவனின் தாயாக இன்று நாம் கொண்டாடும் மிகவும் புனிதம் நிறைந்த மரியாவின் தாய்மையும், பரிவும் நிறைந்த பார்வைக்குக் கீழ் நம்மையே ஒப்படைத்து இந்த ஆண்டை துவக்குகிறோம் என்ற சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 1, இவ்வெள்ளியன்று, வழங்கிய மூவேளை செப உரையைத் துவக்கினார்.

'சியாட்டிகா' எனப்படும் நரம்புத் தொடர்பான பிரச்சனையால், டிசம்பர் 31ம் தேதி மாலை 'Te Deum' நன்றி வழிபாட்டையும், சனவரி 1, இறைவனின் தாய் மரியா பெருவிழா திருப்பலியையும், முன்னின்று நடத்த இயலாமல்போன திருத்தந்தை, இவ்வெள்ளி நண்பகல் வேளையில், வத்திக்கான் நூலகத்திலிருந்து தன் மூவேளை செப உரையை வழங்கினார்.

வரலாற்றுப் பாதையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், நமக்கு கவலைகளை உருவாக்கினாலும், அன்னை மரியா நம்மை எப்போதும் கவனித்துவருகிறார் என்ற எண்ணத்தில், நாம் நம் பயணத்தைக் துவக்குகிறோம், என்ற நம்பிக்கை நிறைந்த சொற்களை, திருத்தந்தை, தன் உரையின் துவக்கத்தில் கூறினார்.

அந்த அன்னை நம்மீது காட்டும் பரிவும், அக்கறையும் நம்மிடையே ஒரு கலாச்சாரமாக உருவாகவேண்டும் என்பதும், அதுவே, உலக அமைதியை உறுதிப்படுத்தும் என்பதும், நாம் இவ்வாண்டு சிறப்பிக்கும் உலக அமைதி நாளின் மையக்கருத்து என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டார்.

நாம் வாழும் இன்றையச் சூழலில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இடத்திலும், அமைதியை உருவாக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும், ஆறுதல் தேவைப்படுவோரின் கரங்களை நாம் பற்றிக்கொண்டு, அவர்களுக்கு, நம் சொல்லாலும் செயலாலும் ஆறுதல் வழங்கவேண்டும் என்பதையும், திருத்தந்தை, தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

சுயநலத்தாலும், வேறு பல தீமைகளாலும், ஆபத்தைச் சந்தித்துவரும் உலக அமைதியை பாதுகாக்க, நாம், பகிர்வை இவ்வுலகில் அதிகம் வளர்க்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுரையின் வழியே விண்ணப்பித்தார்.

"அமைதியின் இளவரசரான" (எசா. 9:6) இயேசுவைப் பெற்றெடுத்த கன்னி மரியா, விண்ணுலகிலிருந்து நம் அனைவருக்கும் இந்த அமைதி என்ற கொடையை பெற்றுத்தருவாராக, என்று கூறிய திருத்தந்தை, மனிதர்களின் முயற்சியைக் கொண்டு மட்டும் உருவாக்கமுடியாத இந்த அமைதிக்காக, நாம் தொடர்ந்து இறைவேண்டல் செய்யவும், பொறுமையுடன் உரையாடல்களை மேற்கொள்ளவும் முயல்வோம் என்ற சொற்களுடன் தன் உரையை நிறைவுசெய்தபின், மூவேளை செபத்தைக் கூறி, அனைவருக்கும் ஆசீரளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2021, 12:45