கர்தினால் Henri Schwery கர்தினால் Henri Schwery  

கர்தினால் Schwery அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தி

கர்தினால் Schwery அவர்களின் மரணத்தையடுத்து, திருஅவையில், மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை, 228 ஆகவும், இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்கு உட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை, 128 ஆகவும் மாறின.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சனவரி 07, இவ்வியாழனன்று இறைபதம் சேர்ந்த, சுவிட்சர்லாந்து நாட்டு கர்தினால் Henri Schwery அவர்களின் ஆன்மா நிறையமைதி அடைய, தான் செபிப்பதாகவும், அவரது பிரிவால் துயருறும் அனைவருடனும் தன் அருகாமையைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Sion மறைமாவட்ட ஆயர் Jean-Marie Lovey அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், கர்தினால் Schwery அவர்கள், திருஅவைக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளைப் பாராட்டியுள்ளதோடு, அவற்றிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் St-Léonard என்ற ஊரில், தன் 88வது வயதில், இறைவனடி சேர்ந்த கர்தினால் Henri Schwery அவர்கள், 1957ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்கும், 1977ம் ஆண்டில் ஆயர் பணிக்கும் அருள்பொழிவு செய்யப்பட்டார்.

1983ம் ஆண்டு முதல், 1988ம் ஆண்டு வரை, சுவிட்சர்லாந்து ஆயர் பேரவைத் தலைவராக பணியாற்றிய இவர், Sion மறைமாவட்டத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றியபின், 1995ம் ஆண்டு, தனது 62வது வயதில், பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

1991ம் ஆண்டு ஜுன் 28ம் தேதி கர்தினாலாக உயர்த்தப்பட்ட, இவரை, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், திருவழிபாடு மற்றும், அருள்பணியாளர் பேராயங்களுக்கு உறுப்பினராக நியமித்தார்.

1988ம் ஆண்டு ஜுன் மாதத்தில், இவரது Sion மறைமாவட்டத்தில், பேராயர் Marcel Lefebvre அவர்கள், திருத்தந்தையின் ஒப்புதலின்றி நான்கு ஆயர்களைத் திருநிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, திருஅவையில் ஏற்பட்ட பிரச்சனையில், ஒன்றிப்புக்காக குரல் கொடுத்தவர், கர்தினால் Schwery.

இவரின் அடக்கச்சடங்கு திருப்பலி, சனவரி 11ம் தேதி, திங்களன்று, Sion பேராலயத்தில், கோவிட் பெருந்தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள தடைகளைப் பின்பற்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினால் Schwery அவர்களின் மரணத்தையடுத்து, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை, 228 ஆகவும், இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்கு உட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை, 128 ஆகவும் மாறின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2021, 14:47