தேடுதல்

பாக்தாத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர் பாக்தாத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர் 

ஈராக்கில் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு செபம்

உடன்பிறந்த உணர்வு, ஒருமைப்பாடு, அமைதி ஆகிய பண்புகளோடு, வன்முறையை அகற்றுவதற்கு, ஈராக் நாடு, தொடர்ந்து பணியாற்றும் - திருத்தந்தை பிரான்சிஸ் நம்பிக்கை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப் பகுதியில், சனவரி 21, இவ்வியாழனன்று அடுத்தடுத்து நடந்த, இரண்டு மனித வெடிகுண்டு தாக்குதல்களுக்கு, தன் வன்மையான கண்டனைத்தை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொடூரமாக நடத்தப்பட்ட அறிவற்ற செயல் என்று, இந்த தாக்குதல்களை, குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதில் உயிரிழந்தவர்கள், இறைவனின் நிறையமைதியை அடையவும், இதில் காயமுற்றோர் மற்றும், மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளோருக்காக தான் செபிப்பதாகவும் கூறியுள்ளார்.

உடன்பிறந்த உணர்வு, ஒருமைப்பாடு, அமைதி ஆகிய பண்புகளோடு, வன்முறையை அகற்றுவதற்கு, ஈராக் நாடு, தொடர்ந்து பணியாற்றும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, அந்நாட்டிற்கும், அந்நாட்டு மக்களுக்கும், இறைவன், தன் ஆசீர்வாதங்களை, நிறைவாகப் பொழியுமாறு தான் மன்றாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஈராக்கிற்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டின் பாக்தாத் மற்றும், நான்கு நகரங்களுக்கு, வருகிற மார்ச் மாதம் 5ம் தேதியிலிருந்து 8ம் தேதி வரை, திருத்தூதுப்பயணம் மேற்கொள்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பாக்தாத் நகரில், துணிகள் விற்கும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கின்ற Tayaran வளாகத்தில் நடத்தப்பட்ட இரட்டை மனித வெடிகுண்டு தாக்குதல்களில், குறைந்தது 32 பேர் பலியாகியுள்ளனர் மற்றும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.

கர்தினால் சாக்கோ கண்டனம்

மேலும், பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் சாக்கோ அவர்களும், பாக்தாத் துணை ஆயர் Shlemon Audish Warduni அவர்களும், இத்தாக்குதல்களுக்கு, தங்களின் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்திருப்பதோடு, நகரின் மையப்பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த வன்முறை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது மற்றும், புரிந்துகொள்ளவும் கடினமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2021, 15:05