சனவரி 3ம் தேதி, ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை செப உரை சனவரி 3ம் தேதி, ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை செப உரை 

உரையாட விரும்பியவர், நம்மோடு குடியிருக்க மனுவுருவானார்

திருத்தந்தை : நம்மைச் சந்தித்துவிட்டு செல்ல இயேசு வரவில்லை, மாறாக, நம்மோடு குடிகொள்ள வந்தார் என்பதால், அவரிடமிருந்து நம்மை எதனாலும் பிரிக்கமுடியாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித குலத்தோடு தன்னை இணைத்துக்கொள்ள, மானிட மகனாக உடலெடுத்த இறைவன், நம் பலவீனங்களிலும் நம்மை அன்புகூர்ந்து, தனக்குரிய அனைத்தையும், நம்மோடு பகிர நமக்கு அழைப்பு விடுக்கிறார் என, சனவரி 3ம் தேதி, ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று, தன் நூலக அறையிலிருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் குடும்பங்களுக்குள் இறைவனை வரவேற்று, அவர் நம் பலவீனங்களையும் அச்சங்களையும் மாற்றியமைக்க அவரை அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இறைவனாம் இயேசு பாலன் இவ்வுலகில் பிறப்பெடுப்பதற்கு முன்னர் எப்படியிருந்தார் என்பதை விவரிக்கும் யோவான் நற்செய்தி முதல் பிரிவில், ஆதியிலே, வார்த்தை இருந்தார், மற்றும், அவரிடம் வாழ்வு இருந்தது என்று கூறப்பட்டுள்ள கருத்துக்களைச் சுட்டிக்காட்டி, திருத்தந்தை விளக்கமளித்தார்.

கடவுள் நம்மோடு பேசுகிறார்

துவக்கத்திலேயே வார்த்தை இருந்தார் என்பது, கடவுள், துவக்க காலத்திலிருந்தே நம்மோடு உரையாட விருப்பம் உடையவராக இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் குழந்தைகளாக இருப்பதில் உள்ள அழகையும், நம் பாவ இருளை அகற்ற அவர் ஆவல் கொண்டுள்ளார் என்பதையும் எடுத்துரைக்கவே மனித உருவெடுத்தார் என்று கூறினார்.

நம்மோடு உரையாட விரும்பிய இறைவன், வார்த்தைகளையும் தாண்டிச்சென்று, நம்மோடு குடியிருக்க மனுவுருவானார் எனவும் உரைத்த திருத்தந்தை, நம் வலுவிழந்த நிலையைத் தொட்டு, நமக்கருகில் இருக்கவேண்டும் என விரும்பிய இறைவன், வலுவிழந்தவராக பிறந்தார் என மேலும் எடுத்துரைத்தார்.

நமக்காக மனுவுருவான இறைவார்த்தையாம் மனுமகன், நமக்காக எப்போதும் இறைத்தந்தையிடம் பரிந்துரைத்துக் கொண்டேயிருக்கிறார், ஏனெனில், அவர் என்றென்றும் நம்மை அன்பு கூர்கிறார் என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மைச் சந்தித்துவிட்டு செல்ல இயேசு வரவில்லை, மாறாக, நம்மோடு குடிகொள்ள வந்தார் என்பதால், அவரிடமிருந்து நம்மை எதனாலும் பிரிக்கமுடியாது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளுக்காக இதயங்களை திறந்து வையுங்கள்

நம் மகிழ்வு, துயர்கள், ஏக்கங்கள், அச்சங்கள், நம்பிக்கைகள், கவலைகள் என அனைத்திலும் நம்மோடு பங்குகொள்ள விரும்பும் இறைவனுக்கு நம் இதயங்களைத் திறந்து வைப்போம் என்ற அழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் குடும்பங்களுக்குள் அவரை அழைக்கும்போது, அவர் நம் வாழ்வையே மாற்றியமைப்பார் என எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2021, 13:03