வத்திக்கானால் நடத்தப்பட்ட இலவச கோவிட் சோதனை உதவிகளின்போது வத்திக்கானால் நடத்தப்பட்ட இலவச கோவிட் சோதனை உதவிகளின்போது 

மனிதரையும், இயற்கையையும் பராமரிக்க நம்மை அர்ப்பணிப்போம்

திருத்தந்தை : வலுவிழந்தோர், மற்றும், சமுதாயத்தில் பின்தங்கியோரை மையமாக வைத்து, நாம், இறைவன் துணையோடு உழைக்கும்போது, அனைத்து நிலைகளும் மேம்படும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வலுவிழந்தோர், மற்றும், சமுதாயத்தில் பின்தங்கியோரை மையமாக வைத்து, நாம் இறைவன் துணையோடு உழைக்கும்போது, அனைத்து நிலைகளும் மேம்படும் என்ற உறுதியோடு செயல்படுவோம் என, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறியபின், தன் புத்தாண்டு வாழ்த்துக்களை மீண்டுமொருமுறை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த 2021ம் ஆண்டு நமக்கு என்ன கொண்டுவரப்போகிறது என்பதை நாம் அறியாமல் இருக்கின்றபோதிலும், நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட நிலையிலும், ஒன்றாக இணைந்தும் ஒரு விடயத்தை ஆற்றமுடியும் என்று கூறிய திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரையும், நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தையும் பேணிக்காக்க நம்மை அர்ப்பணிக்க முடிவதே அது, என்று கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோயால் துன்புறும் மக்களைக் குறித்து எண்ணாமலும், இந்நோய் குறித்த கட்டுப்பாடுகளை மதிக்காமலும், அண்மைக்காலத்தில் பலர் தங்கள் விடுமுறைக் காலத்தை ஆடம்பரமாகக் கொண்டாடியது குறித்து தன் கவலையையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மிகவும் துன்ப துயர நிலைகளோடு இப்புதிய ஆண்டை துவக்கியிருக்கும் மக்கள், நோயுற்றோர், வேலைவாய்ப்புகளின்றி துன்புறுவோர், ஒடுக்கப்பட்டோர், சுரண்டப்பட்டோர் என அனைத்து மக்களையும் நினைவுகூர்ந்து, இவ்வேளையில், அவர்களுக்கு இவ்வாண்டு சிறப்பான ஆண்டாக அமைய தான் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குழந்தை பிறப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு தான் நெருக்கமாக இருப்பதாகவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறப்பு என்பது எப்போதும் நம்பிக்கையின் வாக்குறுதி, எனக் கூறி தன் உரையை நிறைவுச் செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2021, 13:08