தேடுதல்

Vatican News
விமானத்தில் சமூகத்தொடர்பாளர்களுடன் திருத்தந்தை (25082018) விமானத்தில் சமூகத்தொடர்பாளர்களுடன் திருத்தந்தை (25082018)  (ANSA)

உண்மையைத் தேடிச் சென்று நேருக்கு நேராக சந்திக்க அழைப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் - தெரிந்தவிடயங்களைத் தாண்டிச்சென்று, மக்களை நேரடியாகச் சந்தித்து, உண்மைகளை, தொட்டுணரவேண்டியது, சமூகத்தொடர்பாளர்களின் பணி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

'வந்து பாரும்', என்று, தன் முதல் சீடர்களிடம் இயேசு விடுத்த அழைப்பை  தலைப்பாகக்கொண்டு, இவ்வாண்டின் உலக சமூகத்தொடர்பு நாளுக்கென, தன் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சமூகத்தொடர்பாளர்களின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்களின் திருவிழா சனவரி மாதம் 24ம் தேதி சிறப்பிக்கப்படுவதையொட்டி, 55வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கென செய்தி ஒன்றை, இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தொடர்பாளர்களின் மனவுறுதியை பாராட்டியுள்ளதுடன், இன்றைய நவீன சமூகத்தொடர்பு கருவிகள் முன்வைக்கும் வாய்ப்புகளையும் ஆபத்துக்களையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

உலக சமூகத்தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தியில், நமக்கு தெரிந்த விடயங்களையும் தாண்டிச்சென்று, மக்களை நேரடியாகச் சந்தித்து, உண்மைகளை, தொட்டுணரவேண்டும் என, முதலில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சமூகத்தொடர்பாளரும், தான் காணும் பொருட்களின் உயிர்த்துடிப்பையும்  புத்துணர்வையும் தொட்டு எழுதும்போது, அதை வாசிப்பவர்களும், வாழ்வின் உயிர் துடிப்புடைய புதுமையை அவர்களும் தொட்டுணரமுடியும், என்ற அருளாளர் Manuel Lozano Garrido அவர்கள், சமூகத்தொடர்பாளர்களுக்கு எடுத்துரைத்த வார்த்தைகளையும், தன் செய்தியின் முதல் பிரிவில் சுட்டிக்காட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தெருக்களில் சென்று, நேரடியாக மக்களைச் சந்தித்து, செய்திகளைத் திரட்டாமல், நவீன கருவிகளின் துணையுடன், அறைகளில் அமர்ந்துகொண்டே செய்திகளை உருவாக்கும் ஆபத்துக்கள் குறித்து, தன் செய்தியில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவீன தொழில்நுட்பங்களுக்குள் நாம் நம்மையே மூழ்கடித்து, இச்செய்திகளை உருவாக்கும்போது, அதில் முற்றிலுமாக நம்மை ஈடுபடுத்தாமல், வெறும் பார்வையாளர்களாக மாறிவிடும் ஆபத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயேசு தன் முதல் சீடர்களை அழைத்தபோது, 'வந்து பாரும்' (யோவா.1:39), என கூறியதையும்,  பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, இயேசுவைப் பற்றிக் கூறி, 'வந்து பாரும்' (யோவா.1:45-46) என எடுத்துரைத்ததையும், சமாரியப் பெண் தனக்கு நடந்ததையெல்லாம் கிராமத்தில் சென்று அறிவித்ததையும், அவர்கள் இயேசுவிடம் வந்ததையும் (யோவா.4:39-42), தன் செய்தியில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வாறு நாம் உண்மையைத் தேடிசென்று, நேருக்கு நேராக சந்திக்க வேண்டும் என்பதை, இந்த மூன்று நிகழ்வுகளும் நமக்குத் தெரிவிக்கின்றன என கூறியுள்ளார்.

தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றும் சமுகத்தொடர்பாளர்களின் மனவுறுதியைப் பாராட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறுபான்மை மக்கள் சந்திக்கும் துயர்கள், ஏழைகள் அனுபவிக்கும் அநீதிகள்,  சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றை துணிவுடன் எடுத்துரைக்கும் சமூகத் தொடர்பாளர்களின் உறுதியையும் இச்செய்தியில் பாராட்டியுள்ளார்.

இன்றைய நிலையில், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளில், மக்கள், போதிய மருத்துவ உதவிகள் இன்றி துன்புறுவதையும், தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்காத நிலை இருப்பதையும், இன்றைய நவீனத் தொடர்புக் கருவிகள் முன்வைக்கும் வாய்ப்புக்கள் மற்றும் ஆபத்துக்கள் ஆகியவை குறித்தும் தன் செய்தியில் மேலும் விவரித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உண்மையைத் தேடிச்செல்லும் பாதையில், நாங்கள், எங்களையும் தாண்டிசெல்ல எங்களுக்கு உதவியருளும் என்ற ஒரு இறைவேண்டலுடன், தன் உலக சமூகத்தொடர்பு நாளுக்கான செய்தியை நிறைவுச் செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

23 January 2021, 15:08