2020ம் ஆண்டு மனித உரிமைகள் நாளுக்கென வெளியாகியுள்ள விளக்கப்படம் 2020ம் ஆண்டு மனித உரிமைகள் நாளுக்கென வெளியாகியுள்ள விளக்கப்படம் 

மனித உரிமை நாள், மரியாவின் திருநாள் - டுவிட்டர்கள்

"இறைவா, லொரேத்தோவின் புனித கன்னியின் பரிந்துரையால், நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் பிறரன்பு ஆகிய இறக்கைகளை விரித்து எங்கள் இதயங்கள் உயர்ந்து எழட்டும்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 10 இவ்வியாழனன்று உலகெங்கும் சிறப்பிக்கப்பட்ட உலக மனித உரிமைகள் நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

"ஒவ்வொருவருக்கும் அடிப்படையாக அமைந்துள்ள மனித உரிமைகளை, குறிப்பாக, பசியோடும், தாகத்தோடும், ஆடையின்றியும், அன்னியராகவும், சிறைப்பட்டும், நம் 'கண்ணுக்குத் தெரியாமல்' இருப்போரின் உரிமைகளை, (மத். 25,35-36) மதிப்பதற்கு, தீர்மானத்துடனும், துணிவுடனும் நம் பங்கை அளிக்க, நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகியிருந்தன.

மேலும், லொரேத்தோ திருத்தலத்தில், அன்னை மரியாவின் திருநாள், டிசம்பர் 10ம் தேதி கொண்டாடப்பட்டதன் நினைவாக, அவ்வன்னையின் பரிந்துரையோடு, இறைவனிடம் எழுப்பும் ஓர் இறைவேண்டல், திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியாக வெளியானது.

"இறைவா, லொரேத்தோவின் புனித கன்னியின் பரிந்துரையால், நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் பிறரன்பு ஆகிய இறக்கைகளை விரித்து எங்கள் இதயங்கள் உயர்ந்து எழட்டும். அவ்வன்னையை பாதுகாவலாகக் கொண்டுள்ள அனைவரையும் நீர் காத்தருளும்" என்ற இறைவேண்டல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியாக அமைந்தது.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

டிசம்பர் 10, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2.944 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2020, 14:52