ஜெர்மன் இறையியல் மாணவர்கள் சந்திப்பு ஜெர்மன் இறையியல் மாணவர்கள் சந்திப்பு 

ஜெர்மன் இறையியல் மாணவர்கள் சந்திப்பு

சமுதாயத்தில் உடன்பிறந்த உணர்வைக் கட்டியெழுப்புதல், மற்றும், நீதியைப் பாதுகாத்தல் ஆகியப் பணிகளில், மதங்கள் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கமுடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 18, இவ்வெள்ளியன்று, திருவருகைக் காலம் (#Advent) என்ற ஹாஷ்டாக்குடன், மற்றுமொரு செய்தியை, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த திருவருகைக் காலத்தில், அனைவரும் இறைவேண்டலுக்கு நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

“நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பிற்காக காத்திருக்கும் இவ்வேளையில், இறைவேண்டலுக்கு நேரம் ஒதுக்கி, இறைவார்த்தையின் ஒளியில் தியானிக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்துகிறேன், அவ்வாறு செய்வதன் வழியாக, அவ்வார்த்தையில் வாழ்கின்ற தூய ஆவியார், நாம் பின்பற்றவேண்டிய மற்றும், மாற்றம் பெறவேண்டிய பாதையை, நம் இதயங்களில் ஒளிரச்செய்வார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், இரண்டாவது  செய்தியாக இடம்பெற்றுள்ளன.

இறையியல் மாணவர்கள் சந்திப்பு

மேலும், டிசம்பர் 18, இவ்வெள்ளியன்று, ஜெர்மன் நாட்டு இறையியல் மாணவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் தங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை, தங்களது சான்று வாழ்வால், தங்களையொத்த வயதுடையோருக்கு எடுத்துரைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மதத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக உணரப்படாத இக்காலக்கட்டத்தில், பல்வேறு மதங்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவேண்டியது, இறையியல் மாணவர்களின் கடமை என்பதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

சமுதாயத்தில் உடன்பிறந்த உணர்வைக் கட்டியெழுப்புதல், மற்றும், நீதியைப் பாதுகாத்தல் ஆகியப் பணிகளில், மதங்கள் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கமுடியும் என்றுரைத்த திருத்தந்தை, பல்வேறு காரணங்களால், மக்கள், கடவுளை சமுதாயத்திலிருந்து விலக்கி, சிலைகளை வழிபடுவதில் தங்களை ஈடுபடுத்துகின்றனர் என்றும் கூறினார்.

இறையியல் பயிற்சி காலம், ஆன்மீக மற்றும், மனித வாழ்வுப் பயணத்தில் முக்கியமான காலம் என்றுரைத்த திருத்தந்தை, இன்னும் ஒரு வாரத்தில் கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாடவிருக்கும் நாம், பெத்லகேம் குடிலுக்கு உணர்வளவில் திருப்பயணிகளாகச் செல்வோம் என்று கூறி, தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2020, 13:56