திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

கோவிட்-19 காலத்தில் திருத்தந்தையின் அருகாமை

கோவிட்-19 தொடர்பாக, கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்ட காலக்கட்டத்தில், மனிதர் யாருமின்றி காலியாக இருந்த வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், கொட்டும் மழையில் நின்று, இந்த பெருந்தொற்று ஒழியவேண்டும் என்று திருத்தந்தை செபித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இறைமகனின் பிறப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய வாழ்வியல் பாடங்களை மையப்படுத்தி, டிசம்பர் 29, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“புலம்பெயர்ந்தோர் ஒவ்வொருவரும் கடவுளின் குழந்தை என்பதை நமக்கு உணர்த்துவதற்காக, கடவுளின் மகன், புலம்பெயர்ந்தவராகப் பிறந்தார். ஒவ்வொரு குழந்தையும், பலவீனமான மற்றும், எளிதில் தாக்கப்படக்கூடிய முறையில், உலகிற்குள் வருவதுபோன்று, இறை மகனும் உலகிற்குள் வந்தார், இதன் வழியாக, நாமும், நம் பலவீனங்களை, கனிவுள்ள அன்பால் ஏற்பதற்குக் கற்றுக்கொள்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.

கோவிட்-19 காலத்தில் திருத்தந்தையின் அருகாமை

மேலும், சமுதாய இடைவெளிகள் கடைப்பிடிக்கப்படும் இவ்வாண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு வழிகளில்  நம் அனைவரோடும் தன் அருகாமையை வெளிப்படுத்தி வருகிறார் என்று, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.

2020ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகள் பற்றி அலசி, நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள தொர்னியெல்லி அவர்கள், இந்த 2020ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டு திருத்தூதுப்பயணங்கள் மேற்கொள்ளாமல், அதேநேரம், விசுவாசிகளின் முன்னிலையில் ஒரு சில பொது மறைக்கல்வியுரைகளையே நடத்தியிருந்தாலும், உலகெங்கும் வாழ்கின்ற எண்ணற்ற மக்களுடன், வத்திக்கானிலிருந்து, நேரடி ஒலி-ஒளி வலைக்காட்சிகள் வழியாக உடன் பயணித்தார் என்று கூறியுள்ளார்.

நம்மைப் போன்று, திருத்தந்தையும், வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் இருந்துகொண்டு, கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார் என்றும், திருத்தந்தை தனது போக்கில், தொலைப்பேசிகள் மற்றும், இணையத் தொடர்புகள் வழியாக தனது மறைப்பணியை தொடர்ந்து ஆற்றி வருகின்றார் என்றும், தொர்னியெல்லி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இருளில் நம்பிக்கையின் மின்னொளி

2019ம் ஆண்டில் அமேசான் பகுதி பற்றிய சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தில் கொணரப்பட்ட தீர்மானங்களை, Querida Amazonia என்ற தலைப்பில் திருத்தூது அறிவுரை அறிக்கை ஒன்றை, கோவிட்-19 பரவத்தொடங்கிய காலக்கட்டத்தில் திருத்தந்தை வெளியிட்டார், மற்றும், கடந்த அக்டோபர் 4ம் தேதி, Fratelli tutti அதாவது அனைவரும் உடன்பிறந்தோர் என்ற புதிய திருமடலை திருஅவைக்குப் பரிசாக வழங்கினார் என்று, தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.

சிறப்பு ஊர்பி எத் ஓர்பி

கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப நிகழ்வு ஒன்றை நிறைவேற்றி, சிறப்பு ஊர்பி எத் ஓர்பி ஆசீர் வழங்கி, கோவிட்-19 பெருந்தொற்றால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மனித சமுதாயத்திற்காக கடவுளிடம் மன்றாடினார்.

அந்நேரத்தில், மனிதர் யாருமின்றி காலியாக இருந்த வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், கொட்டும் மழையில் நின்று, உலகெங்கும் வலைக்காட்சிகள் வழியாக தொடர்பில் இருந்த  கோடிக்கணக்கான மக்களுடன் சேர்ந்து திருத்தந்தை செபித்தார்.

அந்த செப நிகழ்வில், திருத்தந்தை, உரோம் புனித மர்ச்செல்லோ ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட திருச்சிலுவையின் பாதங்களை முத்தமிட்டார், கோவிட்-19 ஊரடங்கு விதிமுறைகளைக் கடைப்பிடித்த உரோம் மக்களுக்கு, திருநற்கருணை ஆசீர் வழங்கினார். 

ஒவ்வொரு நாளும் திருப்பலி

உலகை அச்சமும், கலக்கமும் நிறைத்திருந்த காலக்கட்டத்தில், முதல் மூன்று மாதங்கள், ஒவ்வொரு நாளும் உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலிகளில் இலட்சக்கணக்கான மக்கள் இணையம்வழி நேரடியாகப் பங்குபெற்றனர்.

ஒவ்வொரு நாளும் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை ஆற்றியதோடு, திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனை வழிபாட்டையும் திருத்தந்தை நிறைவேற்றினார்.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 சமுதாய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட இக்காலக்கட்டத்தில், பல்வேறு வழிகளில், உலக மக்களுடன் தன் அருகாமையை வெளிப்படுத்தி வந்தார் என்று, தொர்னியெல்லி அவர்கள் தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2020, 15:03