இஸ்பானிய வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் இஸ்பானிய வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  

கறைபடாத நம் அன்னையின் அழகு கவர்ந்திழுக்கின்றது

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, டிசம்பர் 08, இச்செவ்வாய் காலையில், இஸ்பானிய வளாகம் சென்று, அன்னை மரியாவின் திருவடிகளில், ரோஜா மலர்க்கொத்தை அர்ப்பணித்து செபித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழா சிறப்பிக்கப்பட்ட, டிசம்பர் 08, இச்செவ்வாயன்று, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றிய பின்னர், இச்செவ்வாய் காலையில், தான் இஸ்பானிய வளாகம் சென்றது பற்றிக் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழா நாள் மாலையில், திருத்தந்தையர் உரோம் மாநகரின் இஸ்பானிய வளாகம் சென்று, பெருமளவான மக்களோடு இணைந்து அன்னை மரியாவுக்கு மேலான வணக்கம் செலுத்தி, அன்னையிடம் செபிக்கும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள் என்று விசுவாசிகளிடம் கூறியத் திருத்தந்தை, கொரோனா கொள்ளைநோய் முன்வைத்துள்ள அச்சுறுத்தலையொட்டி, அரசு அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியும் முறையில், இந்த பழக்கத்தை இன்று கைவிட்டேன் என்று கூறினார்.

ஆயினும், நம் அன்னைக்கு மலர்கள் சூட்டி, அவருக்கு மிகவும் விருப்பமான இறைவேண்டல், தவம், இறையருளுக்குத் திறந்தமனதாய் இருப்பது ஆகியவற்றை ஆற்றுவதற்கு அது தடையாய் இல்லை என்றுரைத்த திருத்தந்தை, இந்நாளின் காலையில், நான் தனிப்பட்ட முறையில் இஸ்பானிய வளாகம் சென்று அன்னை மரியாவிடம் செபித்தேன், அதன்பின்னர் மேரி மேஜர் பெருங்கோவில் சென்று திருப்பலி நிறைவேற்றினேன் என்று அறிவித்தார்.

டுவிட்டர் செய்தி

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் நண்பகலில் தான் ஆற்றிய மூவேளை செப உரையை மையப்படுத்தி, மூவேளை செப உரை (#Angelus) என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“கறைபடாத நம் அன்னையின் அழகு, ஒப்பிடப்பட முடியாதது. அதேநேரம், அன்னையின் அந்த அழகு நம்மைக் கவர்ந்திழுக்கின்றது, நம்மை முழுவதும் அந்த அன்னையிடம் அர்ப்பணிப்போம், என்றென்றும் பாவத்தை விலக்கி நடப்போம், இறையருளுக்கு ஆகட்டும் எனச் சொல்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2020, 14:51