உண்மையான நீதி, மக்களை மகிழ்விக்கும்

எல்லா தீர்ப்புகளும், நீதியானதாக இருக்காது, அதேநேரம், சமத்துவமற்ற நிலை, உரிமைகள் இழப்பு, வன்முறை, மாண்பற்ற நிலை ஆகியவற்றைக் கொணரும் எந்த ஒரு சட்டமும், சரியானதாக இருக்காது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நீதி, உண்மையில் நேர்மையானதாக இருக்கும்போது, அது மக்களை மகிழ்விக்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 30, இத்திங்கள் மாலையில், நீதிபதிகள் நடத்திய மெய்நிகர் கூட்டம் ஒன்றிற்கு, காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

ஆப்ரிக்கா மற்றும், அமெரிக்காவின் சமுதாய உரிமைகள் பற்றிய கழகத்தின் நீதிபதிகள் நடத்திய இணையவழி கூட்டத்திற்கு காணொளிச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, ஆப்ரிக்கா, மற்றும், அமெரிக்காவைச் சேர்ந்த இருபால் நீதிபதிகளே, புதியதொரு சமுதாய நீதியைக் கட்டியெழுப்புவதற்கு, நீங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

எதார்த்தம், நீதியின் தலைமுறை, அர்ப்பணம், வரலாறு, மக்கள், ஒருமைப்பாடு ஆகிய ஆறு கூறுகள் மீது, சமுதாய உரிமைகள் கட்டியெழுப்பப்படவேண்டும் என்று, தன் செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, நீதி, மனித மாண்பு மற்றும், சமத்துவம் ஆகியவற்றை ஊக்குவிக்குமாறு, நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள், சரியானதைத் தீர்மானிக்கும் திறனற்றிருப்பதை, சந்தேகங்களோடும் நம்பிக்கையின்மையோடும் நோக்கும் மக்களுக்கு, நல்வாழ்வு வழங்கும் நோக்கத்தில், தங்களின் அன்றாடப் பணிகளிலிருந்து நேரம் ஒதுக்கி, இந்தக் கூட்டத்தில் பங்குகொண்ட, நீதிபதிகளின் நல்ல முயற்சிகளை ஊக்குவிப்பதாகவும் திருத்தந்தை கூறினார்.

நீதி, உண்மையில் நேர்மையானதாகவே இருக்கும்போது, அது மக்களை மகிழ்விக்கும் மற்றும், அவர்களை மதிப்புள்ளவர்களாக ஆக்கும் என்பதை நினைவில் இருத்துமாறு கூறிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாத் தீர்ப்புகளும், நீதியானதாக இருக்காது, அதேநேரம், சமத்துவமற்ற நிலையையும், உரிமைகள் இழக்கப்படுவதையும், வன்முறையையும், மாண்பற்ற நிலையையும் கொணரும், எந்த ஒரு சட்டமும், சரியானதாக இருக்காது என்றும் கூறினார்.

“சமுதாய நீதியைக் கட்டியெழுப்புதல்: நலிந்த நிலையிலுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாய் செயல்படுத்துவது நோக்கி..” என்ற தலைப்பில், இக்கூட்டம், நடைபெற்றது.

அர்ஜென்டீனா, பொலிவியா, பிரேசில், கனடா, சிலே, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கியூபா, ஈக்குவதோர், அமெரிக்க ஐக்கிய நாடு, குவாத்தமாலா, கொண்டூராஸ், ஜமெய்க்கா, மெக்சிகோ, பெரு, உருகுவாய், வெனெசுவேலா, மொராக்கோ ஆகிய நாடுகளைச் சார்ந்த நீதிபதிகள் இந்த கூட்டத்தில் பங்குபெற்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2020, 14:55