மேரி மேஜர் பெருங்கோவில்- கிறிஸ்து பிறப்பு சிற்றாலயத்தில் திருப்பலி மேரி மேஜர் பெருங்கோவில்- கிறிஸ்து பிறப்பு சிற்றாலயத்தில் திருப்பலி  

திருத்தந்தை: உரோம், உலகுக்காக அன்னை மரியாவிடம் செபம்

உரோம் மாநகரிலும், உலகமனைத்திலும், நோய் மற்றும், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரையும், அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து, அந்த அன்னை, அனைவரையும் தன் பாசத்துக்குரிய பராமரிப்பில் வைத்துக் காப்பாற்றுமாறு திருத்தந்தை மன்றாடினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழாவான, டிசம்பர் 08, இச்செவ்வாயன்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம், மற்றும், உலக மக்கள் அனைவருக்காவும் அன்னை மரியாவிடம் உருக்கமாக மன்றாடினார்.

இச்செவ்வாய் உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு, வத்திக்கானிலிருந்து, உரோம் மாநகரின் இஸ்பானிய வளாகம் சென்று, அவ்விடத்தில் பெரிய தூணின் உச்சியில் அமைந்துள்ள அன்னை மரியாவிடம் வேண்டுதல்களை எழுப்பியபின், உரோம் மேரி மேஜர், அன்னை மரியா பெருங்கோவில் சென்று திருப்பலி நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை, தனிப்பட்ட முறையில் நிறைவேற்றிய இந்நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் அறிவித்த, திருப்பீட தகவல் தொடர்பு மையத்தின் இயக்குனர், மத்தேயோ ப்ரூனி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, இச்செவ்வாய் காலையில், இஸ்பானிய வளாகம் சென்று, அன்னை மரியாவின் திருவடிகளில் ரோஜா மலர்க்கொத்தை அர்ப்பணித்து செபித்தார் என்று கூறினார்.

உரோம் மாநகரிலும், உலகமனைத்திலும், நோய் மற்றும், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரையும், அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து, அந்த அன்னை, அனைவரையும் தன்  பாசத்துக்குரிய பராமரிப்பில் வைத்துக் காப்பாற்றுமாறு திருத்தந்தை மன்றாடினார் என்றும், ப்ரூனி அவர்கள் கூறினார்.

மேரி மேஜர் பெருங்கோவிலில் திருப்பலி

உரோம் நேரம் காலை 7.15 மணிக்கு, இஸ்பானிய வளாகத்திலிருந்து, மேரி மேஜர் பெருங்கோவில் சென்று, அங்கு அமைந்துள்ள கிறிஸ்து பிறப்பு சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியதோடு, அந்தப் பெருங்கோவிலிலுள்ள, Salus Popoli Romani அன்னை மரியாவின் திருப்படத்தின் முன்பாக, திருத்தந்தை செபித்தார் என்றும், ப்ரூனி அவர்கள் அறிவித்தார்.

கத்தோலிக்கத் திருஅவையில் முதன்முறையாக, அன்னா மரியா யூபிலி ஆண்டு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, 1953ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், உரோம் மாநகரின் இஸ்பானிய வளாகத்திற்குச் சென்று அன்னை மரியாவிடம் செபித்தார். அதுமுதல், ஒவ்வோர் ஆண்டும் புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழாவன்று, திருத்தந்தையர் அங்குச் சென்று செபிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. தற்போதைய கோவிட்-19 கொள்ளைநோயின் விதிமுறைகள் காரணமாக, இவ்வாண்டு இந்நிகழ்வு இடம்பெறாது என்று, கடந்த நவம்பர் 30ம் தேதி, ப்ரூனி அவர்கள் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2020, 14:59