தேடுதல்

Vatican News
சயீர் மறைமாவட்டங்களின் உரோமைத் திருப்பலி நூல் சயீர் மறைமாவட்டங்களின் உரோமைத் திருப்பலி நூல் 

சயீர் திருவழிபாட்டுமுறை, அமேசான் வழிபாட்டுமுறைக்கு...

பழங்குடி இன மக்களின் திருவழிபாட்டில், பண்பாட்டுமயமாக்குதலைக் கொணர முயற்சிகள் இடம்பெறவேண்டும் என்று, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

"திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், சயீர் (Zaire) மறைமாவட்டங்களின் உரோமைத் திருப்பலி நூலும்" என்ற தலைப்பில், டிசம்பர் 01, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட நூலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த திருப்பலி நூல், திருவழிபாட்டில் பண்பாட்டுமயமாக்குதல் இடம்பெறுவதை வெளிப்படுத்துகின்றது என்றும், இந்த வழிபாட்டுமுறையை பின்பற்றும் கத்தோலிக்கரின் இதயங்களை, இந்த வழிபாடு தொடவேண்டும் என்றும், திருத்தந்தை, தன் முன்னுரையில் குறிப்பட்டுள்ளார்.

உரோமைத் திருப்பலி நூலிலுள்ள சயீர் வழிபாட்டுமுறை, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப்பின் இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவையால் அங்கீகரிக்கப்பட்ட, ஒரே பண்பாட்டுமயமாக்குதல் வழிபாட்டுமுறையாக இதுவரை இருந்தது என்று எழுதியுள்ள திருத்தந்தை, காங்கோவில் பின்பற்றப்படும் இந்த பண்பாட்டுமயமாக்குதல் திருவழிபாட்டுமுறை, தூய ஆவியாரின் பல்வேறு கொடைகளைச் செழுமைப்படுத்துவதற்கு அழைப்பு விடுக்கின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த சயீர் வழிபாட்டுமுறை நூல், "மற்ற கலாச்சாரங்களுக்கு நம்பிக்கை தரும் வழிபாட்டுமுறை" என்ற துணை தலைப்பைக் கொண்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, திருவழிபாட்டில், பண்பாட்டுமயமாக்குதலைக் கொணர்வது, அமேசான் பகுதி மக்களின் வழிபாட்டுமுறைக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அமேசான் பழங்குடி இன மக்கள், இயற்கையோடு கொண்டிருக்கும் ஆழமான உறவையும், அவர்களின் பாடல்கள், நடனங்கள், சைகைகள், அடையாளங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தத் தூண்டும் கலாச்சாரங்களின் பல கூறுகளையும்  இந்த வழிபாட்டுமுறை கொண்டிருக்கின்றது என்றும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

பழங்குடி இன மக்களின் திருவழிபாட்டில், பண்பாட்டுமயமாக்குதலைக் கொணர முயற்சிகள் இடம்பெறவேண்டும் என்று, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது, ஆயினும், அச்சங்கம் நடைபெற்று, ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இதில் குறைந்த அளவு முன்னேற்றமே இடம்பெற்றுள்ளது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்

01 December 2020, 15:08