அமேசானில் திருத்தந்தை பிரான்சிஸ் அமேசானில் திருத்தந்தை பிரான்சிஸ்  

"உயர்மட்ட சுற்றுச்சூழல் இலக்கு மெய்நிகர் உச்சிமாநாடு"

மாற்றம்கொணர இதுவே ஏற்ற காலம். சிறந்ததோர் வருங்காலம் பற்றிய நம்பிக்கையை, புதிய தலைமுறைகளிடமிருந்து பறித்துவிடாமல் இருப்போம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து பாரிஸ் மாநகரில் முடிவுகள் எடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவேறியதையொட்டி, டிசம்பர் 12, இச்சனிக்கிழமையன்று, அம்மாநகரில் நடைபெற்ற கணணிவழி பன்னாட்டு கூட்டம் ஒன்றிற்கு,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளிச் செய்தி ஒன்றை  அனுப்பியுள்ளார்.

"உயர்மட்ட அளவில் சுற்றுச்சூழல் இலக்கு மெய்நிகர் உச்சிமாநாடு" என்ற தலைப்பில், ஐக்கிய நாடுகள் நிறுவனம், பிரித்தானியா, பிரான்ஸ், சிலே, இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய இக்கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில், தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று மற்றும், காலநிலை மாற்றம் உருவாக்கியுள்ள பிரச்சனைகள், சுற்றுச்சூழலை மட்டும் சார்ந்தவை அல்ல என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

இப்பிரச்சனைகள், அறநெறி, சமுதாய, பொருளாதார மற்றும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், இவை, அனைத்திற்கும் மேலாக, மிக வறியோரையும், நலிந்தோரையும் பாதித்துள்ளன என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இதனால், மனித மாண்பையும், பொதுநலனையும் மையமாக வைத்துச் செயல்படும் அக்கறை கலாச்சாரத்தை ஊக்குவிக்கவேண்டியது நமது கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் யுக்திகளில், திருப்பீடமும் இரு வழிகளில் இணைந்துள்ளது என்றும், முதலாவதாக, வத்திக்கான் நகர நாடு, 2050ம் ஆண்டுக்குமுன், கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

இரண்டாவதாக, ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கல்வியை ஊக்குவிப்பதற்கும் திருப்பீடம் தன்னை அர்ப்பணித்துள்ளது என்றும், அனைத்துக் கண்டங்களிலும் ஏழு கோடிக்கு மேற்பட்ட மாணவர்கள் பயிலும் கத்தோலிக்கப் பள்ளிகள் மற்றும், பல்கலைக்கழகங்கள் இணையும் உலகளாவிய கல்வித் திட்டம் ஒன்றை, தான் ஆரம்பித்து வைத்துள்ளதாகவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

உலக அளவில், இளம் தொழில்முனைவோர், நிதி மற்றும், தொழில் வல்லுனர்கள் ஆகியோர் வழியாக, பிரான்சிஸ் பொருளாதாரத்திற்குத் தான் ஆதரவு அளித்திருப்பதாகவும், மாற்றம்கொணர இதுவே ஏற்ற காலம் என்றும், சிறந்ததோர் வருங்காலம் பற்றிய நம்பிக்கையை, புதிய தலைமுறைகளிடமிருந்து பறித்துவிடாமல் இருப்போம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் காணொளிச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2020, 15:13