ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் கருத்தரங்கில் பங்கேற்றோருடன் திருத்தந்தை - கோப்புப் படம், ஜூன் 2019. ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் கருத்தரங்கில் பங்கேற்றோருடன் திருத்தந்தை - கோப்புப் படம், ஜூன் 2019. 

சிரியா, ஈராக் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து திருத்தந்தை

மனிதாபிமான நெருக்கடிகளில் உழைக்கும் அனைவருக்கும் பின்புலத்தில் கத்தோலிக்கத் திருஅவை என்றும் இருக்கும்; காயப்பட்டிருக்கும் மனித குலத்தைக் காப்பதற்கு பாடுபடும் அனைவரோடும் உடன் பயணிக்கும் – திருத்தந்தையின் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிரியா, ஈராக், மற்றும் அவற்றைச் சுற்றியள்ள நாடுகளில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகளைக் குறித்து சிந்திக்க, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் கலந்துகொள்ளும் உங்கள் அனைவரையும் உளமார்ந்த அன்புடன் வாழ்த்துகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளிச் செய்தியொன்றில் கூறியுள்ளார்.

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகளைத் தீர்க்கும் ஒரு முயற்சியாக, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை, டிசம்பர் 10, இவ்வியாழனன்று, கணனி வழி மெய்நிகர் கூட்டம் ஒன்றை நடத்தியது.

உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களையும், வேறுபல திருஅவை சார்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்த மெய்நிகர் கருத்தரங்கின் துவக்கத்தில் இடம்பெற்ற திருத்தந்தையின் காணொளிச் செய்தியில், அவர், இக்கருத்தரங்கில் பங்கேற்போர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.

அமைதியை வளர்க்க எடுக்கப்படும் ஒவ்வொரு சிறு முயற்சியும், நீதியான சமுதாயம் என்ற கட்டடத்தைக் கட்டுவதற்கு வைக்கப்படும் ஒரு செங்கல்லாக அமைகிறது என்பதை, இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வேளையில், சிரியாவிலும், ஈராக்கிலும், தங்கள் உறைவிடங்களைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளவர்களை என் மனம் எண்ணிப்பார்க்கிறது என்று கூறியுள்ளார்.

இந்நாடுகளிலும், இவற்றைச் சுற்றியுள்ள பகுதியிலும், அமைதி, முன்னேற்றம், ஒப்புரவு ஆகிய விழுமியங்களுக்கு அடையாளங்களாக வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்கள், தொடர்ந்து, அப்பகுதிகளில் வாழ்வதற்கு, நம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்று, திருத்தந்தை இச்செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

அடுத்ததாக, தன் இதயம் புலம்பெயர்ந்தோர் பக்கம் திரும்புகிறது என்று இச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப விழையும் இவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உலக அரசுகளும், பன்னாட்டு அமைப்புக்களும் செய்யவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார்.

பிரச்சனைகள் சூழ்ந்த அனைத்து நாடுகளிலும் பணியாற்றிவரும் கிறிஸ்தவ அமைப்புக்கள் தன் மனதில் இருப்பதை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, நல்ல சமாரியரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் இவ்வமைப்பினர், மதம், நாடு, இனம் என்ற பாகுபாடுகள் பாராமல் அனைவருக்கும் பணியாற்றுவது குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

மனிதாபிமான நெருக்கடிகளில் உழைக்கும் அனைவருக்கும் பின்புலத்தில் கத்தோலிக்கத் திருஅவை என்றும் இருக்கும் என்பதையும், கள்வர் கையில் அகப்பட்டு காயப்பட்டிருக்கும் மனித குலத்தைக் காப்பதற்கு பாடுபடும் அனைவரோடும் திருஅவை உடன் பயணிக்கும் என்றும் உறுதி அளித்து, திருத்தந்தை இச்செய்தியை தன் ஆசீரோடு நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2020, 14:58