தன் 84வது பிறந்தநாளை சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

டிசம்பர் 17, இவ்வியாழனன்று, தன் 84வது பிறந்தநாளை சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, உலகெங்கிலுமிருந்து வாழ்த்துக்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 17, இவ்வியாழனன்று, தன் 84வது பிறந்தநாளை சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, உலகெங்கிலுமிருந்து வாழ்த்துக்கள் வந்தவண்ணம் உள்ளன. இவ்வாண்டு, உலகெங்கும் பரவியுள்ள கொள்ளைநோயின் காரணமாக, இப்பிறந்தநாளையொட்டி, திருத்தந்தை, எவ்வித நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை. எனினும், இந்த குறுகிய காணொளி, அவரது தலைமைப்பணி வாழ்வின் பல உன்னத தருணங்களைத் தொகுத்து வழங்குகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் – வாழ்க்கைக் குறிப்புகள்

1936ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி அர்ஜென்டினாவின் புவனஸ் அயிரெஸ் நகரில் பிறந்த Jorge Mario Bergoglio அவர்கள், வேதியியலில் பட்டம்பெற்று, 1958ம் ஆண்டு இயேசு சபையில் இணைந்தார். 1969ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, இயேசு சபை அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1973ம் ஆண்டு முதல் 1979 வரை அர்ஜென்டினாவில் இயேசு சபை மறைமாநிலத் தலைவராக பணியாற்றியபின், 1998ம் ஆண்டு முதல் புவனஸ் அயிரெஸ் பேராயராக பணியாற்றியபோது, 2001ம் ஆண்டு, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

2013ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், பதவி விலகியதைத் தொடர்ந்து, அதே ஆண்டு மார்ச் 13ம் தேதி திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 13ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று தன் அருள்பணித்துவ வாழ்வின் 51ம் ஆண்டை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2020, 12:13