தென் சூடான் தலைவர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட சந்திப்பில், ஆங்கிலிக்கன் பேராயர் - கோப்புப் படம் (2019) தென் சூடான் தலைவர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட சந்திப்பில், ஆங்கிலிக்கன் பேராயர் - கோப்புப் படம் (2019) 

திருத்தந்தை, ஆங்கிலிக்கன் பேராயர் இணைந்து, கிறிஸ்மஸ் செய்தி

திருத்தந்தை பிரான்சிஸ், ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி, ஸ்காட்லாந்து சபையின் ஒருங்கிணைப்பாளரான முனைவர் மார்ட்டின் பேர் ஆகிய மூவரும் இணைந்து, தென் சூடான் தலைவர்களுக்கு கிறிஸ்மஸ் சிறப்புச் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆங்கிலிக்கன் சபையின் தலைவரான பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களோடும், ஸ்காட்லாந்து சபையின் ஒருங்கிணைப்பாளரான முனைவர் மார்ட்டின் ஃபேர் அவர்களோடும் இணைந்து, தென் சூடான் தலைவர்களுக்கு, கிறிஸ்மஸ் சிறப்புச் செய்தியொன்றை, டிசம்பர் 24, இவ்வியாழனன்று அனுப்பியுள்ளனர்.

தென் சூடான் நாட்டிற்கு செல்லும் ஆவலை, மீண்டும் ஒருமுறை, இச்செய்தியின் வழியே உறுதிப்படுத்தியுள்ள இந்த மூன்று தலைவர்களும், அமைதியை உருவாக்க, அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறு முயற்சிகளை பாராட்டியுள்ளனர்.

தென் சூடான் மக்கள் அமைதியின் முழு விளைவுகளையும் பெறுவதற்கு, தற்போது நிகழ்ந்துள்ள முயற்சிகள் மட்டும் போதாது என்பதையும் இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள இத்தலைவர்கள், தாங்கள் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் வேளையில், அங்குள்ள தலைவர்கள், ஒருங்கிணைந்து, கரங்களை இணைத்து உருவாக்கியுள்ள மாற்றம் நிறைந்த நாட்டைக் காண விழைவதாகக் கூறியுள்ளனர்.

விலங்குகள் தங்கும் தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து, இறையரசை உருவாக்கும் அனைத்து ஊழியர்களையும் தன் எளிய வழியில் வாழ்வதற்கு அழைத்துள்ளார் என்பதையும், இம்மூன்று தலைவர்கள், இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

"அறிவெல்லாம் கடந்த இறை அமைதி, கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும், உங்கள் நாட்டையும் பாதுகாப்பதாக" (பிலிப்பியர் 4:7) என்ற வேண்டுதல் நிறைந்த வாழ்த்துடன், திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் ஜஸ்டின் வெல்பி மற்றும் முனைவர் மார்ட்டின் ஃபேர் ஆகிய மூன்று தலைவர்களும் தங்கள் கிறிஸ்மஸ் செய்தியை நிறைவு செய்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 December 2020, 12:20