திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தையின் கிறிஸ்மஸ் கால திருவழிபாடுகள்

தற்போதைய கோவிட்-190 கொள்ளைநோய் விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் பெருவிழா நள்ளிரவு திருப்பலியை, உரோம் நேரம் இரவு 7.30 மணிக்கு, குறைந்த அளவு விசுவாசிகளின் பங்கேற்புடன் நிறைவேற்றுவார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் நிறைவேற்றும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களின் திருவழிபாடுகள் பற்றிய விவரங்களை, திருப்பீட தகவல் தொடர்பகம், டிசம்பர் 10, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது.

தற்போதைய கோவிட்-19 கொள்ளைநோய் விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குறைந்த அளவு விசுவாசிகளின் பங்கேற்புடன், இந்த திருவழிபாடுகளை நிறைவேற்றுவார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியுள்ளது.

டிசம்பர் 24ம் தேதி, உரோம் நேரம் இரவு 7.30 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், கிறிஸ்மஸ் பெருவிழா நள்ளிரவு திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை, 25ம் தேதி கிறிஸ்மஸ் பெருவிழாவன்று, நண்பகலில், ஊர்பி எத் ஓர்பி ஆசீர் வழங்குவார்.

டிசம்பர் 31ம் தேதி, வியாழக்கிழமை உரோம் நேரம் மாலை 5 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், மாலை திருப்புகழ்மாலை செபித்து, ‘தே தேயும்’ நன்றி வழிபாட்டையும், திருத்தந்தை நிறைவேற்றுவார்

சனவரி முதல் நாள், வெள்ளிக்கிழமை, உரோம் நேரம், காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், கடவுளின் தாய் புனித கன்னி மரியா பெருவிழா மற்றும், 54வது உலக அமைதி நாள் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருக்காட்சிப் பெருவிழா திருப்பலியையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், தலைமையேற்று நிறைவேற்றுவார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் அனைத்து திருவழிபாடுகளிலும், விசுவாசிகளின் பங்கேற்பு மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், அவை அனைத்தும், ஊடகங்கள் வழியாக, நேரடி ஒலி மற்றும், ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், குவாதலூப்பே அன்னை மரியாவுக்கு முடிசூட்டப்பட்ட நாளின், 125வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படும் வேளையில், அந்த அன்னையின் திருநாளான டிசம்பர் 12, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில், குறைவான மக்களின் பங்கேற்போடு திருப்பலியை நிறைவேற்றுவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2020, 15:13