புதன் மறைக்கல்வியுரை - 30.12.20 புதன் மறைக்கல்வியுரை - 30.12.20 

மறைக்கல்வியுரை - நன்றியறிவிப்பு இறைவேண்டல்

இவ்வுலகின் மீது பொழியப்பட்டுள்ள இறைவனின் மீட்பளிக்கும் அருளிற்கு, நன்றியறிதலின் இறைவேண்டல்களை முன்வைப்போம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கிறிஸ்மஸ், மற்றும், புத்தாண்டு காலத்தில் மக்கள், விழா கொண்டாட்டங்களுக்கென ஒன்றுகூடுவதை தவிர்க்கும்பொருட்டு, இத்தாலி நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து, இக்காலங்களில் தன் நூலக அறையிலிருந்தே மறைக்கல்வி உரைகளையும் மூவேளை செப உரைகளையும் வழங்கி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். சனவரி மாதம் 6ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்க உள்ள இந்த கட்டுப்பாடுகளையொட்டி, இப்புதனன்றும் கணனித் தொடர்பு வழியாகவே மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை, 'நன்றியறிவிப்பு இறைவேண்டல்' என்பது குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

முதலில், புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமடலிலிருந்து ஒரு பகுதி (1 தெச. 5,16-19) பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட, திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.

எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். (1 தெச 5,16-19)

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே,

இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, நன்றியுரைப்பு இறைவேண்டல் குறித்து நோக்குவோம். புனித லூக்கா நற்செய்தியில் நாம், பத்து நோயாளிகள் இயேசுவால் குணம் பெற்றதையும், அதில் ஒருவர் மட்டுமே, நன்றியுரைக்க திரும்பி வந்தது குறித்தும் வாசிக்கிறோம். இந்த நிகழ்வு நமக்கு நன்றியுரைப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கிறது. நன்றியுள்ளவைகளாக இருக்கும் இதயங்களுக்கும், இல்லாமல் இருக்கும் இதயங்களுக்கும் உள்ள வேறுபாட்டை இங்கு நாம் காண்கிறோம். கிடைப்பதெல்லாம் தங்களுக்கு உரியது, அல்லது, தாங்கள் அதற்கு தகுதியானவர்கள் என்று நோக்குபவர்களுக்கும், அவற்றை தங்களுக்கு கொடுக்கப்பட்ட அருளாக நோக்குபவர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு இது. இறைவனின் மகனும், நம் மீட்பருமாகிய இயேசுவின் வருகையில் வெளிப்படுத்தப்பட்ட இறைஅன்பிற்கு நாம் வழங்கும் நன்றியுணர்வினால் தூண்டப்பட்டதாக, கிறிஸ்தவர்களாகிய நம் நன்றியின் இறைவேண்டல் இருக்கவேண்டும். இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் முழு நம்பிக்கைக் கொண்டு அதற்காக இறைவேண்டல் செய்து கொண்டிருந்த இதயங்கள், எவ்வாறு மெசியாவின் வருகையை வரவேற்றார்கள் என்பதை இயேசுவின் பிறப்பையொட்டி நடந்த நிகழ்வுகளில் காண்கிறோம். இவ்வுலகின் மீது பொழியப்பட்டுள்ள இறைவனின் மீட்பளிக்கும் அருளிற்கு நாம் வழங்கும் நன்றியறிதலின் தொடர்ந்த இறைவேண்டல்களை உள்ளடக்கியதாக இந்த கிறிஸ்மஸ் கால கொண்டாட்டங்கள் இருப்பதாக. இந்த இறைவேண்டுதல்கள், நம் இதயங்களை மேலும் விரிவாக்கி, நற்செய்தி வழங்கும் மகிழ்வையும் நம்பிக்கையையும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு, குறிப்பாக, உதவித்தேவைப்படும் நம் சகோதரர் சகோதரிகளுக்கு வழங்க உதவுவதாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை, நன்றியறிவிப்பின் இறைவேண்டல் குறித்து வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் அனைவருக்கும் அமைதிநிறை புத்தாண்டு மலரட்டும், அது நன்மைத்தனத்திற்கான உங்கள் ஏக்கங்களை நிறைவுசெய்வதாக இருக்கட்டும் என வாழ்த்தினார். பெத்லகேமில் வானதூதர்களால் கொணரப்பட்ட நற்செய்தியை அறிவிப்பவர்களாக அனைவரும் செயல்படுவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை, முதியோர், இளையோர், நோயுற்றோர், புதுமணத் தம்பதியர் ஆகியோரை சிறப்பான விதத்தில் நினைவுகூர்வதாக எடுத்துரைத்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2020, 12:11