மறைக்கல்வியுரையின்போது - 161220 மறைக்கல்வியுரையின்போது - 161220 

மறைக்கல்வியுரை – பரிந்துரையின் இறைவேண்டல்

இறைவேண்டலில் ஈடுபடும் மனிதர்களின் கதவுகளை நாம் எப்போது தட்டினாலும், அங்கு கருணை நிறைந்த இதயங்களை அவர்களுக்குள் நாம் கண்டுகொள்ளலாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இறைவேண்டல் குறித்த தன் சிந்தனைகளை, அண்மைக்கால புதன் மறைக்கல்வி உரைகள் வழியே பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரமும், வத்திக்கானில் நூலக அறையிலிருந்து, கணனி வலைத்தொடர்பு வழியே, நடைபெற்ற நேரடி ஒளிபரப்பில் விசுவாசிகளைச் சந்தித்து, இறைவேண்டல் குறித்த மற்றொரு பரிமாணத்தை எடுத்துரைத்தார். 'பரிந்துரையின் இறைவேண்டல்' என்ற கருத்தை மையப்படுத்தி, திருத்தந்தையின் மறைக்கல்வி உரை அமைந்திருந்தது. புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தின் 6ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி, வெவ்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டபின், திருத்தந்தை தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, மனித குலத்தின் மகிழ்வையும், துயரையும், நம்பிக்கைகளையும், ஏக்கங்களையும் தன்னுள் கொண்டிராத இறைவேண்டல், வெறும் அலங்காரச் சொற்களால் நிறைந்த ஒரு செயலாக இருக்கும். இறைவனுடன் நமக்குரிய நெருங்கிய உறவுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தையும், இடத்தையும் நாம் மதித்து, அதற்குள் நுழையவேண்டியத் தேவை உள்ளது. இறைவேண்டலின் மனிதர்கள், இறைவனின் குரலுக்கு நல்ல விதத்தில் செவிமடுக்கும் நோக்கத்தில், தனிமையையும், அமைதியையும் தேடுகின்றனர். இறைவேண்டலில் ஈடுபடும் மனிதர்களின் கதவுகளை நாம் எப்போது தட்டினாலும், அங்கு கருணை நிறைந்த இதயங்களை அவர்களுக்குள் நாம் கண்டுகொள்ளலாம்.

எல்லா இறைவேண்டல்களிலும் மனித அனுபவம் நிறைந்துள்ளது. மனிதர்கள் எவ்வித தவறுகளையும் செய்தவர்களாக இருப்பினும், அவர்களை ஒதுக்கிவைக்கவோ, அவர்களை மறுக்கவோ இயலாது. இறை நம்பிக்கையாளர் ஒருவர், தூய ஆவியாரால் தூண்டப்பட்டு, பாவிகளுக்காக இறைவேண்டல் செய்யும்போது, குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டும்தான் என்றோ, அல்லது, கண்டனத்தீர்ப்பு வழங்கியோ, அதை மேற்கொள்வதில்லை.

மற்றவர்களுக்காக பரிந்துரை இறைவேண்டல்களை மேற்கொள்பவர்களின் துணையுடன், இவ்வுலகம் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. திருஅவை, தன் அனைத்து உறுப்பினர்களிலும், குறிப்பாக, பொறுப்பில் இருப்போரில், பரிந்துரை இறைவேண்டலை கடைபிடிக்கும் பணியைக் கொண்டுள்ளது. நாம் அனைவரும் ஒரே மரத்தின் இலைகளைப்போல் உள்ளோம். ஆகவே, ஒவ்வோர் இலையும் துளிர்விடும்போது, அவர்களுக்கு, நம் இறைவேண்டல் வழியே உதவவேண்டியது, கட்டாயம் என்பதை நினைவுறுத்தி நிற்கிறது.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருவருகைக் காலத்தில், இயேசுவின் ஒளி, நம் பாதைகளை ஒளிர்வித்து, நம் இதயங்களின் அச்சங்களை அகற்றுவதாக என வாழ்த்தினார். பின்னர், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2020, 12:28