பாட்னா உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர் செபாஸ்டின் கல்லுப்புரா பாட்னா உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர் செபாஸ்டின் கல்லுப்புரா  

பாட்னா உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர் கல்லுப்புரா

பாட்னா உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிவந்த பேராயர் வில்லியம் டி'சூசா அவர்களின் பணிஓய்வு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பொறுப்பில் வாரிசுரிமைப் பேராயர் செபாஸ்டின் கல்லுப்புரா அவர்களை நியமித்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் பாட்னா உயர் மறைமாவட்டத்தின் வாரிசுரிமைப் பேராயராகப் பணியாற்றிவந்த செபாஸ்டின் கல்லுப்புரா அவர்களை, அவ்வுயர் மறைமாவட்டத்தின் பேராயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 9, இப்புதனன்று நியமித்துள்ளார்.

2007ம் ஆண்டு முதல், பாட்னா உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிவந்த பேராயர் வில்லியம் டி'சூசா அவர்கள் பணிஓய்வு பெற விழைந்து அனுப்பிய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பொறுப்பில் செபாஸ்டின் கல்லுப்புரா அவர்களை நியமித்துள்ளார்.

1946ம் ஆண்டு பிறந்த வில்லியம் டி'சூசா அவர்கள், இயேசு சபையில் இணைந்து, 1976ம் ஆண்டு, அருள்பணியாளராகவும், பின்னர், 2005ம் ஆண்டு, பக்ஸார் (Buxar) மறைமாவட்டத்தின் ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டார்.

2007ம் ஆண்டு முதல், பாட்னா உயர் மறைமாவட்டத்தின் பேராயராக கடந்த 13 ஆண்டுகள் பணியாற்றிவந்த டி'சூசா அவர்கள், தன் 75வது வயதில் பணிஓய்வு பெறுகிறார்.

1953ம் ஆண்டு பிறந்த செபாஸ்டின் கல்லுப்புரா அவர்கள், 1984ம் ஆண்டு, பாட்னா உயர் மறைமாவட்ட அருள்பணியாளராகவும், பின்னர், 2009ம் ஆண்டு, பக்ஸார் மறைமாவட்டத்தின் ஆயராகவும் அருள்பொழிவு பெற்றார்.

2018ம் ஆண்டு ஜூன் 29ம் தேதியன்று, கல்லுப்புரா அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாட்னா உயர் மறைமாவட்டத்தின் வாரிசுரிமைப் பேராயராக நியமித்தார்.

இவ்வாண்டு, நடைபெற்ற இந்திய ஆயர் பேரவை கூட்டத்தில், பிப்ரவரி 17ம் தேதி, பேராயர் கல்லுப்புரா அவர்கள் இந்திய காரித்தாஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2020, 15:16