புனித பேதுரு பெருங்கோவிலில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு பெருங்கோவிலில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை பிரான்சிஸ் - கிறிஸ்மஸ் திருப்பலி மறையுரை

நமக்காக அல்ல, மாறாக, மற்றவரின் துயர் கண்டு ஆறுதல் வழங்கும் வகையில் நம் கண்ணீர் இருக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலி நாட்டில், கொரோனா தொற்றுநோய் அச்சம் காரணமாக, இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணிவரை, மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், திருத்தந்தையின் வழக்கமான, கிறிஸ்மஸ் இரவு திருப்பலி, அரசின் கட்டுப்பாடுகளை மனதில் கொண்டதாக, மாலையிலேயே நிறைவேற்றப்பட்டது. மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே விசுவாசிகள் அனுமதிக்கப்பட்டு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் உள்ளூர் நேரம் மாலை 7.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் நள்ளிரவு 12 மணிக்கு துவங்கிய கிறிஸ்து பிறப்பு பெருவிழாத் திருப்பலி, பங்குபெற்ற விசுவாசிகளின் எண்ணிக்கையிலும், நிறைவேற்றப்பட்ட நேரத்திலும் வேறுபட்டிருந்ததே தவிர, மற்றனைத்து அம்சங்களிலும், ஏனைய ஆண்டுகள் போன்றே இருந்த்து. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வுலகிற்கு நம்பிக்கையைக் கொணர்பவராகவும், கடவுள் நம்மை அன்புகூர்கிறார் என்பதை நிரூபிப்பவராகவும்  இயேசு பாலன் வருகிறார் என்ற கருத்தை வலியுறுத்தி நிகழ்த்தப்பட்ட திருப்பலிக் கொண்டாட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரையின் சுருக்கத்திற்கு இப்போது செவிமடுப்போம்.

இறைவாக்கினர் எசாயாவின் “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்” (எசாயா 9:6), என்ற சொற்கள், இந்த இரவில் தன் நிறைவைக் காண்கின்றன. நமக்கு ஓர் ஆண்மகவு தரப்பட்டுள்ளது. ஒரு குழந்தை பிறப்பதால் கிடைக்கும் மகிழ்வு, கிடைத்த அனைத்திலும் மிகப்பெரிய ஒன்று என்பது, நம் அனைவருக்கும் தெரியும். அது விவரிக்க முடியாத ஒரு மகிழ்வை நமக்குத் தருகிறது. அதுதான் கிறிஸ்துவின் பிறப்பிலும் நடக்கிறது. எந்த ஒரு துயரையும், துணிவுடன் கடந்து செல்லும் பலத்தை அது நமக்குத் தருகிறது.

ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார் என இறைவாக்கினர் கூறும் வார்த்தைகளையே, திருப்பாடலில், 'இன்று நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார்' என கூறுகிறோம். இயேசு நமக்கென தன்னையே ஒப்படைத்தார் (தீத்து  2:14), என புனித பவுல் கூறும் சொற்களையும், இன்று உங்களுக்கு ஒரு மீட்பர் பிறந்துள்ளார் (லூக் 2:11). என வானதூதர் அறிவித்த சொற்களையும் குறித்து சிந்திப்போம்.

நம்மை அருளின் குழந்தைகளாக, இறைவனின் பிள்ளைகளாக மாற்றுவதற்கு, இறைவனே இறங்கி வருகிறார். இது ஒரு வியத்தகு கொடை. 'நான் உன்னுடனேயே இருக்கிறேன்' என்ற உறுதியை நமக்கு வழங்கி, எத்தடைகளையும், துயர்களையும் தாண்டிச்செல்லும் பலத்தை இறைவன் நமக்கு வழங்குகிறார்.

நமக்கென இறைவன் தன் சொந்த மகனையேத் தந்துள்ளார். ஆனால், நாம் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வற்ற செயல்களையும், நம் சகோதர சகோதரிகளுக்கு ஆற்றும் அநீதிகளையும் பார்க்கும்போது, இறைவன் நம்மை உயர்வாக மதித்து இத்தகைய கொடையை அளிப்பதற்கு நாம் தகுதியுடையவர்கள்தானா என்ற கேள்வி எழுகின்றது. அவர் நமக்கு உயரிய ஓர் இடத்தை கொடுத்துள்ளார், ஏனெனில், அவரின் அன்பு அத்தகையது. நம்மை அன்புகூர்வதன் வழியாக, நம் உள்மனக் காயங்களை குணப்படுத்தவும், நம்மை மீட்கவும் செய்கிறார், இறைவன். மற்றும், மன நிறைவற்ற நிலை, கோபம், குற்றம் சாட்டுதல் என்ற தீயச் சுழல்களிலிருந்து நம்மை விடுவிக்கிறார்.

ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார். அரசர்களின் மாளிகையில் பிறக்கும் தகுதியுடைய ஒரு குழந்தை, மாடடைத் தொழுவத்தில், இருள் சூழ்ந்த ஓர் இடத்தில் பிறக்க வேண்டிய காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. நம் ஏழை எளிய நிலைகளைத் தொட்டு, நம்மை அவர் எவ்வளவு தூரம் அன்பு கூர்கிறார் என்பதைக் காட்ட, அவரும் எளிய வகையில் பிறப்பெடுத்தார். நம் ஏழ்மையின் வழியாக நமக்கு மிகப்பெரும் செயல்களை அருளும்வகையில், நம்மை அன்புகூர்கிறார் இறைவன். ஏழ்மை கண்டு அச்சம் கொள்ளாமல், நம் மீட்பை மாடடைக் குடிலில் வைக்கிறார் இறைவன். இவ்வுலகின் துன்ப துயர்களை மாற்றியமைக்கும் நோக்கத்தில், அவரின் கருணை நம்மில் செயல்பட அனுமதிப்போம்.

ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார். இது மட்டுமல்ல, 'குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்;  இதுவே உங்களுக்கு அடையாளம்”,  என இடையர்களிடம் வானதூதர் சொல்வதைக் காண்கிறோம். நமக்கும் இந்த அடையாளமே, வாழ்வில் நம்மை வழிநடத்துவதாக உள்ளது.

அப்பத்தின் வீடு என அழைக்கப்படும் பெத்லகேமில், மாடடைத் தொழுவத்தில் இறைமகன் பிறந்தது, நாம் உண்ணும் அப்பமாக இறைவன் நமக்கு வேண்டும் என்பதை நமக்கு நினைவுறுத்தி நிற்கின்றது. களியாட்டங்கள், வீண் வெற்றிகள், உலகாயுத போக்குகள் என, நாம் உட்கொள்ளும் உணவு, நமக்குள் ஒரு வெற்றிடத்தையே உருவாக்கிச் செல்கிறது.

நம் வாழ்வின் ஆதாரமாகிய இறைவனை அறியாமல், நாம் பலவேளைகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இறைவன் நம்மை அன்புகூர்கிறார் என்பதையும், நாமும் மற்றோரை அனபுகூர வேண்டும் என்பதையும், பெத்லகேம் மாடடைத் தொழுவம் நமக்குக் கற்றுத்தருகின்றது. வார்த்தையாம் இறைவன், வார்த்தைகளற்ற ஒரு குழந்தையாக தன் வாழ்வையே நமக்கு வழங்க வந்துள்ளார். அதற்கு நேர்மாறாக, நாமோ, நிறைய பேசுகிறோம், அதேவேளை நன்மைத்தனம் குறித்து அறியாதவராக செயல்படுகிறோம். நமக்கென ஒரு குழந்தை பிறந்துள்ளார். சிறு கைக்குழந்தையை வீட்டில் கொண்டிருப்போருக்குத் தெரியும், எவ்வளவு அணைப்பும் பொறுமையும் தேவைப்படும் என்று. அன்பின் தேவையை ஒரு குழந்தை நமக்கு உணர வைப்பதுடன், அன்புகூரவும் கற்றுத்தருகிறது.

மற்றவர் குறித்து அக்கறையுடன் செயல்படவேண்டும் என்பதை நமக்குக் காட்ட குழந்தையாகப் பிறந்தார் இறைவன். பொறுமையற்ற நம் அழுகுரல்கள் எவ்வளவு பயனற்றவை என்பதை கண்டுகொள்ள, குழந்தை இயேசுவின் அமைதியான கண்ணீர் நமக்கு உதவுகிறது. நமக்காக அல்ல, மாறாக, மற்றவரின் துயர் கண்டு ஆறுதல் வழங்கும் வகையில் நம் கண்ணீர் இருக்கவேண்டும் என அது சொல்கிறது. நமக்கருகிலேயே இருக்கும் ஏழைகளையும், உதவி தேவைப்படுவோரையும் அன்புகூர்வதன் வழியாக இறைவனையே நாம் அன்புகூர்கிறோம்.

இவ்வாறு தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கென ஓர் ஆண்மகவு பிறந்துள்ளார்.  இறைவனின் குழந்தைகளாக எம்மை மாற்ற, இறைவனின் குழந்தையாம் இயேசுவே நீர் வந்தருளும். மாடடைத் தொழுவத்தில் பிறந்த உம்மை நான் வாரி அணைப்பதன் வழியாக, வாழ்வையே நான் அரவணைக்கிறேன். வாழ்வின் அப்பமாகிய இயேசுவை நான் வரவேற்கும்போது, என் வாழ்வையும் பிறருக்கு வழங்க ஆவல்கொள்கிறேன். என் மீட்பராம் இறைவன், நான் சேவையாற்றவேண்டிய தேவையை எனக்கு உணர்த்துகிறார். இறைவன், தன் சகோதரர்களாக, சகோதரிகளாக நடத்தியுள்ள இவ்வுலகின் மக்கள் அனைவரும், இவ்விரவிலிருந்து என் சகோதர்களே, சகோதரிகளே. அவர்களுக்கு ஆறுதல் வழங்க எனக்கு உதவியருளும், என,  இறுதியில் செபித்து, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 December 2020, 14:41